×

தினகரன் வாசகர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!கவர்னர், முதல்வர், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தினகரன் வாசகர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கவர்னர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் கூறிய வாழ்த்துக்கள் பின்வருமாறு:  

* ஆளுநர் பன்வாரிலால் புரோகித்: புதிய 2021ம் ஆண்டானது ஒவ்வொருவரின் வாழ்விலும், மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்.  தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: 2021ம்  ஆண்டு அனைத்து மக்களுக்கும் இன்பத்தையும், மகிழ்ச்சியையும், சுகத்தையும்  தரும் ஆண்டாக அமைய வேண்டும். அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்.

* முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி: வளமும் வலிமையும் மிக்க தமிழ்நாட்டை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழச் செய்திட அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்திடுவோம்.  தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இருளை விரட்டும் உதயசூரியன் ஒளியாக, நெருக்கடி மிகுந்த நோய்த்தொற்றுப் பேரிடர் காலத்திலிருந்து உலகத்தாரும்-தமிழக மக்களும் வேகமாக மீண்டு வரும் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி வைக்கும் 2021 ஆங்கிலப் புத்தாண்டு நன்னாளில் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எண்ணற்ற சவால்களும் சங்கடங்களும் நிறைந்த 2020ம் ஆண்டின் தாக்கம் ஒரே நாளில் தணிந்துவிடாது. அவற்றை நீக்குவதற்கும்-மக்களுக்குத் தேவையான நன்மைகள் கிடைப்பதற்கும் தொடர்ந்து பாடுபட வேண்டும். அத்தகைய அறப் பணிகளில் அனைவரும் அக்கறையுடன் ஈடுபட வேண்டும்.

நம் கடன் பணி செய்து கிடப்பதே-என்ற நன்னெறி ஏந்தி, நாளும் உழைத்திட-ஊழியம் செய்திட, திமுக எப்போதும் போல் இப்போதும் தயாராகவே இருக்கிறது. புத்தாண்டைத் தொடர்ந்து தை முதல் நாளாம்-தமிழர் திருநாளாம் - நம் பண்பாட்டை எடுத்துரைக்கும் தமிழ்ப் புத்தாண்டாம் பொங்கல் நன்னாள் வருகிறது. மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்குகிற காலம் விரைந்து வருவதை எடுத்துரைக்கும் வகையில், வழக்கம் போல திமுகவினர் அவரவர் பகுதிகளில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கும் ‘சமத்துவப் பொங்கல்’ விழாவினை, தமிழ்ப் பண்பாடு தவழ்ந்திடக் கொண்டாடிடவும், குதூகலம் கொண்டிடவும் வாழ்த்துகிறேன்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையோடு வாழ்வை தொடருவோம்.

* கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழகத்தின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும். தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

* ராமதாஸ் (பாமக நிறுவனர்): 2021ம் ஆண்டு இனிப்பாக அமையும். அனைத்து மக்களுக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்.

* வைகோ (மதிமுக பொது செயலாளர்): ஊழல் ஆட்சி அகற்றப்படவும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று திமுக ஆட்சி அமையவும் உறுதி எடுத்துக்கொண்டு தமிழக மக்கள் தீர்ப்பளிக்க வேண்டும். அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன்.

* முத்தரசன் (சிபிஐ மாநில செயலாளர்): மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள்  மாபெரும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு 2021ம் ஆண்டு வருகின்றது.

* கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம் மாநில செயலாளர்): எதிர்வரும் ஆண்டு போராட்டங்களின் ஆண்டாக அமையும் என்பது திண்ணம். இந்தப்  போராட்டங்கள் சாதி, மத பேதம், போதை, வன்முறையற்ற தமிழகம் உருவாவதற்கான  அடிக்கல் நாட்டட்டும்.

* ஜி.கே.வாசன் தமாகா  தலைவர்): அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறேன்.

டி.டி.வி.தினகரன்(அமமுக பொது செயலாளர்):  எல்லா வகையிலும் சிறந்த  ஆண்டாகவும் உற்சாகம் தருகிற ஆண்டாகவும் 2021 திகழட்டும் என வாழ்த்தி  மகிழ்கிறேன்.

* சரத்குமார் (சமக தலைவர்): புத்தாண்டு பிறக்கும் தருணத்தில் புது உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் அயராத உழைப்பு, தன்னம்பிக்கை, மன உறுதி மூலம் சாதனை படைக்கின்ற ஆண்டாக 2021 அமைய வாழ்த்துகிறேன்.

* அன்புமணி (பாமக இளைஞர் அணி தலைவர்):  தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், ஆனந்தம், வளர்ச்சி,  அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும்.

* பிரசிடெண்ட் அபுபக்கர் (இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர்): புத்தாண்டு பிறந்திருக்கிறது. இத்தனை  தூரம் பயணித்த நமக்கு, வரும் நாட்கள் வளத்தையும், அமைதியையும்,  மகிழ்ச்சியையும், செல்வத்தையும் அள்ளித் தரும் ஆண்டாக அனைவருக்கும்  அமையட்டும்.

* இதே போல திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக  தலைவர் டாக்டர் சேதுராமன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம. நாராயணன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா உள்ளிட்ட தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Tags : Dinakaran ,Greetings ,Governor ,leaders ,Chief Minister ,MK Stalin , Happy English New Year to all Dinakaran readers ..! Leaders including Governor, Chief Minister, MK Stalin
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...