சிட்னி டெஸ்ட் போட்டிக்கு ஆயத்தம் ரோகித் ஷர்மா தீவிர பயிற்சி இந்திய அணி உற்சாகம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ள நட்சத்திர வீரர் ரோகித் ஷர்மா, நேற்று பயிற்சியைத் தொடங்கியது இந்திய அணியினரை உற்சாகமடைய வைத்துள்ளது. இந்தியா  ஆஸ்திரேலியா அணிகளிடையே 4 போட்டிகள் கொண்ட பார்டர்  கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது டெஸ்ட் சிட்னி கிரிக்கெட்  மைதானத்தில் ஜன.7ம் தேதி தொடங்குகிறது. சிட்னியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், இரு அணி வீரர்களும் மெல்போர்னிலேயே தங்கி உள்ளனர். கேப்டன் விராத் கோஹ்லி சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பிய  நிலையில், ரகானே தலைமையில் களமிறங்கி 2வது டெஸ்டில் அபார வெற்றியை வசப்படுத்திய இந்திய அணி வீரர்கள் சிட்னி டெஸ்டிலும் வென்று முன்னிலை பெறும் உத்வேகத்துடன் உள்ளனர்.

அவர்கள் இரண்டு நாள் ஓய்வெடுத்துக் கொண்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் ரோகித் ஷர்மா நேற்று பயிற்சியை தொடங்கியது சக வீரர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்ததும் காயம் காரணமாக நாடு திரும்பி  ஓய்வெடுத்து வந்த ரோகித், ஆஸி.யுடன் நடந்த ஒருநாள், டி20 தொடர்கள் மற்றும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.  தற்போது முழு உடல்தகுதியுடன் ஆஸ்திரேலியா வந்துள்ளார். இரண்டு வார கட்டாய தனிமைப்படுத்தல் முடிந்து அணியுடன் இணைந்துள்ள அவர் சிட்னி டெஸ்டில் களமிறங்குவது அநேகமாக உறுதியாகி உள்ளது. வரும் செவ்வாயன்று  அணியின் மருத்துவக் குழுவினர் ரோகித்தின் உடல்தகுதி பற்றி அளிக்கும் மதிப்பீட்டின் அடிப்படையில் அவர் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படுவார் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். சிட்னி டெஸ்டில் ரோகித்தை  தொடக்க வீரராகக் களமிறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் மயாங்க் அகர்வால், ஹனுமா விஹாரிக்கு பதிலாக ரோகித், கே.எல்.ராகுல் இடம் பெறுகின்றனர். வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக  ஷர்துல் தாகூர் அல்லது தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்படும் வாய்ப்பு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நடராஜன், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாகி இந்திய அணியின் வெற்றிக்குப் பங்களித்தது குறிப்பிடத்தக்கது.

குறுகிய காலத்திலேயே தனது துல்லியமான பந்துவீச்சால் ‘யார்க்கர் கிங்’ நடராஜனாகப் புகழ் பெற்றுவிட்ட அவர் டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமாகி அசத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா வியூகம்: மெல்போர்ன் டெஸ்டில்  8 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அதில் இருந்து மீள்வதற்கு கடுமையாக முயற்சித்து வருகிறது.

அதிரடியாக பல மாற்றங்களை செய்துள்ள ஆஸி. அணி நிர்வாகம், தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸுக்கு பதிலாக நட்சத்திர வீரர் டேவிட் வார்னரை களமிறக்குகிறது. காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த வார்னர் 100 சதவீத உடல்தகுதியுடன்  இல்லை என்றாலும் கூட அவரை விளையாட வைப்பதில் தாங்கள் உறுதியுடன் உள்ளதாக துணை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டோனால்டு தெரிவித்துள்ளார்.இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி அறிமுக வீரராக பிளேயிங் லெவனில் இடம்  பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. பயிற்சி ஆட்டத்தின்போது பந்து ஹெல்மெட்டை பலமாகத் தாக்கியதால் காயம் அடைந்த புகோவ்ஸ்கி, மூளை அதிர்ச்சியில் இருந்து மீண்டு விளையாடத் தயாராகி உள்ளார். இவர் வார்னருடன் இணைந்து  இன்னிங்சை தொடங்கலாம்.

ஸ்மித்துக்கு நெருக்கடி டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக இருந்து வந்த ஸ்டீவன் ஸ்மித், நடப்பு தொடரில் பார்மை இழந்து தடுமாறி வருவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. இதுவரை விளையாடிய 4  இன்னிங்சில் அவர் மொத்தம் 10 ரன் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், ’ஸ்மித் விரைவில் பார்முக்குத் திரும்புவார். அவரது பேட்டிங் நுணுக்கத்தில் எந்த குறைபாடும் இல்லை. வலைப்பயிற்சியில் மிகுந்த நம்பிக்கையுடன்  பந்துகளை எதிர்கொண்டார். எனவே கவலைப்பட எதுவும் இல்லை’ என்று மெக்டொனால்டு கூறியுள்ளார்.

Related Stories: