×

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் மே 4ம் தேதி தொடங்கும்: ஜூலை 15ல் ரிசல்ட் மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மே 4ம் தேதி தொடங்கும். தேர்வு முடிவுகள் ஜூலை 15ம் தேதி வெளியிடப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று அறிவித்தார். நாடு முழுவதும் கொராேனா தொற்று பரவியதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தாலும், பள்ளி கல்லூரிகள் மட்டும் இன்னும் திறக்க அனுமதிக்கவில்லை. எனினும், சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை. இருப்பினும் இதுவரை நடத்தப்பட்ட பாடப்பகுதிகளில் இருந்து தேர்வுக்கு தேவையான அளவில் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும். பிப்ரவரிக்கு பிறகு தேர்வு நடக்காது என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து  இருந்தார். அத்துடன், பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்படும் தேதி டிசம்பர் 31ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்து  இருந்தார்.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் படித்து வரும் சுமார் 30 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வுத் தேதி தெரிந்து கொள்வதில் ஆவலுடன் காத்திருந்தனர். இதையடுத்து, நேற்று மாலை சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகள் குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிவிப்பு :சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் 2021 மே மாதம் 4ம் தேதி முதல் ஜூன் மாதம் 10ம் தேதி நடக்கும். தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும். இந்த தேர்வுகளுக்கான முடிவுகள், 2021 ஜூலை 15ம் தேதி வெளியிடப்படும். மார்ச் 1ம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகள் நடக்கும். கொரோனா தொற்று காரணமாக இந்த தேர்வுகளை  நடத்தாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்து விடலாம். ஆனால்,  இதில் தேர்ச்சி பெற்று போகும் மாணவர்கள் கொரோனா காலத்து மாணவர்கள் என்று  முத்திரை குத்திவிடுவார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பும் மறுக்கப்படும்  சூழல் ஏற்படலாம். அதனால் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது என்றார்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் ஜனவரி மாதத்தில்தான் நடக்கும், எழுத்து தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் முடிவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கமுடியாத நிலை ஏற்பட்டதால் தேர்வுகள் ஒத்திப் போகின்றன. கடந்த ஆண்டு நடத்த பத்தாம் வகுப்பு தேர்வில் 10 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பிலும், 10 லட்சத்து 80 ஆயிரம் பேர் பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.  அமைச்சர் நேற்று அறிவித்த அறிவிப்புக்கு இணங்க தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.


Tags : elections ,CBSE ,Union Minister , CBSE, General Elections, Union Minister, Information
× RELATED ஒன்றிய அமைச்சருக்கு கர்நாடகாவில் சீட் மறுப்பு