×

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் நாளை தடுப்பூசி ஒத்திகை: 3 இடங்களில் நடைபெறும்

புதுடெல்லி: தமிழகம் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசியை வழங்குவது தொடர்பாக நாளை ஒத்திகை நடத்தப்படுகிறது. இந்தியாவில் கடந்த மார்ச்சில் தொடங்கிய கொரோனா பரவல், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் உருவாகியுள்ள அதிவேகமாக பரவும் மரபணு மாற்றம் அடைந்த வீரியமிக்க கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே தாக்கி வரும் கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பூசி, உலகளவில் பயன்படுத்தப்பட தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு நாடுகளின் தடுப்பூசியும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. தடுப்பூசி போடும் பணி இம்மாதம் தொடங்கும் என மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த மாதம் 28, 29ம் தேதிகளில் தடுப்பூசியை போடும் பணி ஒத்திகை பார்க்கப்பட்டது. இது, வெற்றிகரமாக அமைந்தது.

இதையடுத்து, தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, இப்பணியை நாளை முதல் தொடங்க ஏற்பாடு செய்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களையும் தலைமை செயலாளர்கள், சுகாதார துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை, அனைத்து மாநிலங்களிலும் ஜனவரி 2ம் தேதி (நாளை) நடத்தப்படும்.

மாநில தலைநகரங்களில் குறைந்தபட்சம் 3 இடங்களில் இது நடத்தப்படும். சில மாநிலங்கள் மோசமான, போதுமான வசதி இல்லாத மாவட்டங்களில் ஒத்திகையை நடத்தலாம். மகாராஷ்டிரா, கேரள மாநிலங்கள் தலைநகர் தவிர, மற்ற முக்கிய நகரங்களில் ஒத்திகை நடத்தலாம். தடுப்பூசி போடும் பணியில் ஏற்படக் கூடிய சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Vaccine rehearsal ,states ,places ,Tamil Nadu , Tamil Nadu, Vaccination, Rehearsal
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்