×

காவல் துறை அணிவகுப்பு மரியாதையுடன் டிஜிபி ஜாபர் சேட் ஓய்வு பெற்றார்: டிஜிபி திரிபாதி நினைவு பரிசு வழங்கினார்

சென்னை: தமிழக காவல் துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றி. தற்போது தீயணைப்புத்துறை இயக்குநராக இருந்த டிஜிபி ஜாபர் சேட் நேற்று பணி ஓய்வு பெற்றார். அவருக்கு டிஜிபி திரிபாதி உள்ளிட்ட மூத்த காவல் துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழக தீயணைப்புத்துறை இயக்குநராக பணியாற்றியவர் டிஜிபி ஜாபர் சேட்(60). ஐபிஎஸ் அதிகாரியான இவர் தமிழக காவல் துறையில் கடந்த 1986ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி நேற்று ஓய்வு பெற்றார். டிஜிபி ஜாபர் சேட்டுக்கு எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை காவல் துறை சார்பில் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சில் டிஜிபி ஜாபர் சேட் மற்றும் அவரது மனைவி பர்வின் ஜாபர் உடன் கலந்து கொண்டார். அவருக்கு குதிரைப்படை அணிவகுப்பு மற்றும் பேன்ட் வாத்தியத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் திறந்த ஜீப்பில் சென்று தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சில் டிஜிபி திரிபாதி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். டிஜிபி தமிழ்செல்வன், கூடுதல் டிஜிபிக்கள், மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

டிஜிபி திரிபாதி பூங்கொத்து கொடுத்து டிஜிபி ஜாபர் சேட்டை விழா மேடைக்கு அழைத்தார். பிறகு நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் டிஜிபி ஜாபர் சேட் பேசியதாவது: 35 ஆண்டு கால காவல் துறை பணியில் சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை, பாதுகாப்புத்துறை, உளவுத்துறை, பயிற்சி, குற்றப்புலனாய்வுத்துறை, தீயணைப்புதுறை என்று அனைத்து பிரிவுகளிலும் பயனித்துள்ள நான், காணாத உயரங்களும் இல்லை. அடையாத வீழ்ச்சிகளும் இல்ைல. என் உயர்வில் ஊக்குவித்த, மகிழ்ந்த, உற்சாகப்படுத்திய சக அதிகாரிகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

நான் வீழ்ந்த போது பணியில் மருந்தாய், பசியில் உணவாய், பகையில் துணையாய் உடன் இருந்து தன்னை தாங்கி பிடித்த கரங்களுக்கு நண்பர்களுக்கும் எனது சக அதிகாரிகளுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். பொதுவாகவே காவல் துறை பணி என்பது கடுமையான ஒன்று. ஆரம்ப முதலே 50 விழுக்காடு அதிருப்தியில் தான் நாம் பணியாற்றுகிறோம். 50 விழுக்காடு சந்தேக கண்ணோட்டத்தின் இடையிலும், நியாயமற்ற காழ்ப்புணர்ச்சிக்கு இடையிலும் தான் நாம் பணி  செய்ய வேண்டி இருக்கிறது.

அதுமட்டுமின்றி நடுநிலைமை என்பது அவரவர் மன ஓட்டத்திற்கு ஏற்றப்படி எடுத்துக்கொள்ளப்படுகிதே தவிர, எவ்வளவு நியாயமான பணியில் ஈடுபட்டாலும், நடுநிலைமை தவறாத அதிகாரி என்ற பெயரை அவ்வளவு எளிதில் யாரும் பெற்றுவிட முடியாது. என் கரங்கள் பிறருக்கு உதவி காயம் பட்டு இருக்கிறதே தவிர யாரையும் கெடுத்தது இல்லை. எந்த சகோதர பாசத்துடன் உங்கள் மத்தியில் 35 ஆண்டுகள் கழித்தேனோ அதே சகோதர பாசத்துடன் உங்களுடன் நான் இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Chad ,DGP Tripathi , Police Department, DGP Tripathi
× RELATED இஸ்ரோ விண்ணில் செலுத்திய எக்ஸோ சாட்...