×

ஆங்கிலப் புத்தாண்டு நன்னாளில் வாழ்த்து: மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இருளை விரட்டும் உதயசூரியன் ஒளியாக, நெருக்கடி மிகுந்த நோய்த்தொற்றுப் பேரிடர் காலத்திலிருந்து உலகத்தாரும்-தமிழக மக்களும் வேகமாக மீண்டு வரும் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி வைக்கும் 2021 ஆங்கிலப் புத்தாண்டு நன்னாளில் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எண்ணற்ற சவால்களும் சங்கடங்களும் நிறைந்த 2020ம் ஆண்டின் தாக்கம் ஒரே நாளில் தணிந்துவிடாது.

அவற்றை நீக்குவதற்கும்-மக்களுக்குத் தேவையான நன்மைகள் கிடைப்பதற்கும் தொடர்ந்து பாடுபட வேண்டும். அத்தகைய அறப் பணிகளில் அனைவரும் அக்கறையுடன் ஈடுபட வேண்டும். நம் கடன் பணி செய்து கிடப்பதே-என்ற நன்னெறி ஏந்தி, நாளும் உழைத்திட-ஊழியம் செய்திட, திமுக எப்போதும் போல் இப்போதும் தயாராகவே இருக்கிறது. புத்தாண்டைத் தொடர்ந்து தை முதல் நாளாம்-தமிழர் திருநாளாம் - நம் பண்பாட்டை எடுத்துரைக்கும் தமிழ்ப் புத்தாண்டாம் பொங்கல் நன்னாள் வருகிறது.

மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்குகிற காலம் விரைந்து வருவதை எடுத்துரைக்கும் வகையில், வழக்கம் போல திமுகவினர் அவரவர் பகுதிகளில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கும் ‘சமத்துவப் பொங்கல்’ விழாவினை, தமிழ்ப் பண்பாடு தவழ்ந்திடக் கொண்டாடிடவும், குதூகலம் கொண்டிடவும் வாழ்த்துகிறேன்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : MK Stalin , English New Year, Greetings, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...