×

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும்: அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: ‘‘ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள துறை ரீதியான ஒழுங்கு  நடவடிக்கையை அதிமுக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். திமுக ஆட்சி அமைந்ததும் அவர்களின் நியாயமான கோரிக்கைகள்  நிறைவேற்றப்படும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: “பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து விட்டு,  மீண்டும் வெகு நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே கொண்டுவர வேண்டும்” என்பது உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை வைத்துப் போராடிய ஜாக்டோ- ஜியோ அமைப்பினைச் சேர்ந்த ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை இதுவரை ரத்து செய்யாமல் இருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் பழனிசாமி,  வேண்டுகோள் விடுத்தார். ஆனால் வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டு கொரோனா காலத்திலும் மக்களுக்காக அயராது பணியாற்றி வரும் 5068 ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு  17(பி)-யின் கீழ் குற்றக் குறிப்பாணைகள் வழங்கி பேரின்னலுக்கு உள்ளாக்குவது கண்டனத்திற்குரியது. அவர்கள் மீதே  ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்திருப்பது  வஞ்சகமான அணுகுமுறை. இது நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருப்பதால், அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை; பணி ஓய்வும் கிடைக்கவில்லை. பணி ஓய்வுக்குப் பின் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை. ஏன், அவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு கூட கிடைக்கவில்லை. ஆசிரியர்களையும் - அரசு ஊழியர்களையும், அடுக்கடுக்காக தொடர்ந்து இவ்வளவு  துயரத்தில் ஆழ்த்தி, முதலமைச்சர் பழனிசாமி எதைச் சாதிக்கப் போகிறார்? அரசின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நம்பி, போராட்டத்தை விலக்கிக் கொண்ட அரசு ஊழியர்களை முதுகில் குத்தி இப்படி துரோகம் இழைத்துக் கொடுமைப்படுத்துவது மன்னிக்க முடியாது.

எனவே, கொரோனா பேரிடருக்காக தங்களின் ஒரு நாள் ஊதியமாக 150 கோடி ரூபாயை முதல்வர் பொது நிவாரண நிதிக்காக அளித்த ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் நியாயமான உணர்வினை கொச்சைப்படுத்தி நிந்திக்காமல்-ஏற்கனவே வாக்குறுதி அளித்தவாறு-5068 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி அமைந்ததும், ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Teachers ,servants ,MK Stalin ,government , Authors, MK Stalin, request
× RELATED 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை...