×

மாநில மனித உரிமை ஆணைய தலைவராக பாஸ்கரன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: மாநில மனித உரிமை ஆணைய தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் செயல்படுகிறது. இதன் தலைவராக மேகாலயா முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி மீனா குமாரி நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 2019 நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து, மாநில மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவராக துரை ஜெயச்சந்திரன் பிப்ரவரியில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், மாநில மனித உரிமை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில், மாநில மனித உரிமை ஆணையத்துக்கு புதிய தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக தேர்வு குழு கூட்டம் தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 26ம் தேதி நடந்தது. இதில், குழு உறுப்பினர் சபாநாயகர் தனபால் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமை செயலாளர் சண்முகம், பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் குழு உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் புறக்கணித்தார்.

இக்கூட்டத்தில் புதிய மாநில மனித உரிமை ஆணைய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவின் படி, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலோடு மாநில மனித உரிமை ஆணைய தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரனை நியமனம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார். அதில், இவர் மூன்று ஆண்டுகள் வரை இப்பதவியில் நீடிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று மாநில மனித உரிமை ஆணைய தலைவராக பாஸ்கரன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தற்காலிக தலைவர் துரை ஜெயச்சந்திரன் மலர் பூங்கொடுத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பயோடேட்டா
மாநில மனித உரிமை ஆணைய தலைவராக  நியமிக்கப்பட்டுள்ள பாஸ்கரன், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில்  1956ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் வி.சாமியப்பா,  எஸ்.பர்வதம். சாமியப்பா, மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வு  பெற்றவர். எஸ்.பாஸ்கரன் 1988ம் ஆண்டு சிவில் நீதிபதியாக தேர்வு  செய்யப்பட்டு, 2001ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தமிழகம்  முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய இவர், நீதிபதிகள் சங்கத்தின்  பொருளாளர், செயலாளர், தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். இவர், சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2016 அக்டோபர் 5ம் தேதி பதவியேற்று 2018  நவம்பர் 16ம் தேதி ஓய்வு பெற்றார்.

Tags : Baskaran ,State Human Rights Commission ,Government of Tamil Nadu , Human Rights Commission, Government of Tamil Nadu, Order
× RELATED கல்குவாரி நீரில் மூழ்கி மனைவி, மகன்...