இருவேறு விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாப பலி

திருநின்றவூர்:  திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் இயேசுராஜ் (26). இவர், சென்னையில் உள்ள பிரபல சிமென்ட்  தொழிற்சாலையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். மேலும், இவர் போரூர் அருகே முகலிவாக்கத்தில்  வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இயேசுராஜ் தொழிற்சாலை வேலை தொடர்பாக திருநின்றவூர் பகுதிக்கு வந்துள்ளார். பின்னர், அவர் அங்கிருந்து மீண்டும் பைக்கில் சென்னைக்கு புறப்பட்டார். இவர், பட்டாபிராம் அருகே  நெமிலிச்சேரி, சி.டி.எச் சாலை, சர்ச் அருகே வந்தபோது, அச்சாலை வழியாக நெமிலிச்சேரி, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாண்டு(65) என்ற முதியவர் கடக்க முயன்றுள்ளார். அதனை கவனிக்காத இயேசுராஜ் பைக், அவர் மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் இயேசுராஜ் பைக்குடன் சாலையில் விழுந்தார். அப்போது, அந்த வழியாக வந்த சிமென்ட் ஏற்றி வந்த லாரி, அவர் மீது  மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இயேசுராஜ் உடல் நசுங்கி இறந்தார். மேலும், அந்த விபத்தில் முதியவர் பாண்டும் படுகாயம் அடைந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான பெரம்பலூரை சேர்ந்த   கருப்பையா (32) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல், திருநின்றவூர், சி.டி.எச் . சாலையில் தனியார் இரும்புக்கம்பி விற்பனை செய்யும் குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு சரக்குகளை ஏற்றி செல்ல நேற்று முன்தினம் மாலை வந்த லாரியை டிரைவர் குடோன் முன்பாக சாலை  ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார். அப்போது, அங்கு மழை பெய்ததால் அந்த லாரிக்கு அடியில்  வாலிபர் ஒருவர் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். இதனை கவனிக்காமல், டிரைவர் லாரியை ஓட்டி எடுத்து சென்றுள்ளார். இதில், அந்த வாலிபர்  லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.  மேலும், இறந்தவருக்கு  30 வயது இருக்கும், யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. மேலும், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>