×

2021 செப்டம்பர் வரை கீழடி அகழாய்வு தொடர மத்திய அரசு அனுமதி: ஐகோர்ட் கிளையில் தகவல்

மதுரை:  கீழடி, ஆதிச்சநல்லூரில் 2021 செப்டம்பர் வரை அகழாய்வு தொடர மத்திய அரசு அனுமதித்துள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வுகள் மூலம் வரலாற்று சிறப்புமிக்க ஆற்றங்கரை நாகரிகம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்குரிய ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் தமிழர்களின் பழங்கால  நாகரிகம் மற்றும் பண்பாட்டு திறனை நம்மால் அறிய முடிகிறது. இதேபோல், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ராஜவள்ளிபரம்பு, பாளையங்கோட்டை, கிருஷ்ணாபுரம்பரம்பு, வடக்கு வள்ளநாடு, அகரம், முரப்பநாடு, திருப்புளியங்குடி,  திருவைகுண்டம், குறும்பூர் நல்லூர், கொற்கை, காயல்பட்டினம், வீரபாண்டியபட்டினம் உள்ளிட்ட 32 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் இன்னும் பல அரிய பொருட்கள் கிடைக்கும்.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கீழடி, சிவகளை, கொடுமணல், மயிலாடும்பாறை, கொற்கை, கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வை தொடர்ந்து நடத்த தமிழக தொல்லியல்துறை மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. இந்த விண்ணப்பம்  இன்னும் பரிசீலனையில் தான் இருக்கிறது. எனவே, இங்கு தொல்லியல் ஆய்வை தொடர அனுமதிக்குமாறும், வைகை மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில்  கூறியிருந்தார்.
மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி ஆஜராகி, ‘‘தமிழகத்திலுள்ள ஆதிச்சநல்லூர், கீழடி, சிவகளை, கொடுமணல், மயிலாடும்பாறை, கொற்கை,  கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழக அரசு சார்பில் செப்.2021 வரை அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது’’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை முடித்து வைத்தனர்.



Tags : Icord Branch , Excavating kilati allowed to continue until the federal government in September 2021: High Court branch information
× RELATED அனைத்து சாதியினருக்கும்...