×

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் அட்டவணை தயாரிப்பு: ஜனவரி முதல் வாரத்தில் ஆணைய குழு மீண்டும் வருகை

புதுடெல்லி: தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய சட்டப் பேரவைகளின்  விதிமுறைகள் முறையே மே 24, ஜூன் 1, மே 30, ஜூன் 8 மற்றும் மே 31ம் தேதிகளில்  காலாவதியாகின்றன. அதனால், மார்ச், ஏப்ரல் மாதங்களில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று மே 2வது  வாரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், தமிழகத்தில் மே 24ம்  தேதிக்குள் புதிய அரசு அமைய வேண்டும் என்பதால், அதற்கு முன்னதாக ஐந்து மாநில தேர்தல்களையும்  முடித்து முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். அதனால், அந்தந்த மாநில தலைமைச் செயலாளர்கள்  மற்றும் தலைமைத் தேர்தல்  அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வ ஆலோசனைகளை தலைமை தேர்தல்  ஆணையம் அனுப்பி உள்ளது.

அதன் ஒருபகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன் மேற்குவங்கம், தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு  துணை தேர்தல் ஆணையர் அந்தஸ்திலான அதிகாரிகள் குழு, அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று  தேர்தல் ஏற்பாடுகள் குறித்து 2 நாட்கள் ஆய்வு நடத்தின. அப்போது, ‘வாக்குப்பதிவு அதிகாரிகளாக  நியமிக்கப்படுவர்கள், அவர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களில் நியமிக்க கூடாது. நீண்ட காலமாக ஒரே  மாவட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகளையும் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கக் கூடாது. கடந்த  காலங்களில் தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களுக்கு பணி வழங்கக் கூடாது.

மேலும்,  வரவிருக்கும் ஆறு மாதங்களுக்குள் ஓய்வு பெறவிருக்கும் எந்தவொரு  அதிகாரியும் தேர்தல்  தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது தேர்தல்  ஆணையம் பரிந்துரையின் பேரில்  நியமிக்கப்பட்ட அதிகாரிகளை, மீண்டும் நியமிப்பதில் விலக்கு   அளிக்கலாம். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து அதிகாரிகளின் முழு விவரத்தையும்  சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் மாநில தலைமை   தேர்தல் அதிகாரியிடம் அறிக்கையாக தரவேண்டும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்தல்  நடத்தவுள்ளதால் கூடுதல் வாக்குச்சாவடி அமைப்பது தொடர்பான பட்டியலை தயார் ெசய்ய வேண்டும்’  என்பன போன்ற சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம்,  திருவள்ளூர், வேலூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில்  பெரும்பாலான  வாக்குச்சாவடிகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், அங்கு கூடுதல்   வாக்குச்சாவடிகள் அமைய உள்ளன. அதாவது, ஒவ்வொரு சாவடியிலும் வாக்காளர்களின்  எண்ணிக்கை  1,000க்கும் குறைவாக இருக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி  உள்ளதால், அந்த  வாக்குச்சாவடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்  போது, ​​65,000க்கும் மேற்பட்ட  வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. சில வாக்குச்சாவடிகளில் தலா  1,500க்கும்  மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தனர்.

இந்த முறை வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை  30  சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது வாக்குச் சாவடிகளின்  எண்ணிக்கையை 95,000 ஆக உயர்த்த  தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் ஐந்து  மாநிலங்களில் நடக்கவுள்ள தேர்தல் ஏற்பாடு குறித்து,  சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்துள்ளன. ஜனவரி 2வது வாரத்தில்  தலைமை தேர்தல் ஆணையக் குழு அந்தந்த மாநிலங்களில் சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளன.

 அப்போது, கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்தல் நடைமுறைகளை அமல்படுத்துதல்,  அதிகாரிகள் நியமனம், வாக்காளர் தொடர்பான பட்டியல் வெளியிடுதல், சட்டம் ஒழுங்கு  மறுஆய்வு,  பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள் நியமனம் குறித்து தேர்தல் அதிகாரிகள் ஆலோசிக்க உள்ளனர். அதன்பின், அந்தந்த மாநில நிலவரங்களின் அடிப்படையில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது,  உள்ளூர் விழாக்கள், வானிலை நிலவரங்கள், பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஆகியன குறித்து விவாதிக்கப்பட  உள்ளன. அதன்பின் தேர்தல் தேதிகள் இறுதிெசய்யப்பட்டு, தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட  உள்ளது.

 இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தனியார் செய்தி நிறுவனத்திற்கு  அளித்த பேட்டியில், ‘பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் கொரோனா வழிகாட்டு ெநறிமுறைகளின்  அடிப்படையில் முதன்முறையாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 7 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களில் 4 கோடிக்கும் அதிகமானோர் தங்கள்  வாக்குரிமையை பதிவு செய்தனர். சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு  வாக்குச்சாவடியிலும் அதிகபட்சமாக 1,000 வாக்காளர்களுக்கு மேல் அனுமதிக்கவில்லை. அதற்காக  கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதேபோல், அடுத்த ஆண்டு நடைபெறும் 5 மாநில  தேர்தல்களிலும் கடைபிடிக்கப்படும்’ என்றார்.

உமேஷ் சின்ஹா பதவி நீடிப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறும் தேர்தல் ஏற்பாடு பணிகளை, துணை தேர்தல் ஆணையர்  உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு கடந்த சில நாட்களுக்கு முன் ஆய்வு செய்தது. கடந்த 1986ம்  ஆண்டு உத்தரபிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரியான உமேஷ் சின்ஹா தற்போது (இன்றுடன்) ஓய்வு  பெற்றுள்ளார். இந்நிலையில் மத்திய பணியாளர் நல அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘துணை  தேர்தல் ஆணையராக இருந்த உமேஷ் சின்ஹாவின் பதவிக்காலம் மேலும் 6 மாதத்திற்கு  நீடிக்கப்படுகிறது. அவர், துணை தேர்தல் ஆணையராக ஜூன் 30, 2021 வரை பதவியில் இருப்பார்’ என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இவர், தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர்களின் தேர்தல்  செலவுகளை கண்காணிப்பதற்கான தேர்தல் ஆணையம் அமைத்த குழுவின் அதிகாரியாக பணியாற்றினார்  என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Tamil Nadu ,Kerala ,West Bengal ,Pondicherry ,Assam 5 ,Commission , Tamil Nadu, Kerala, West Bengal, Pondicherry, Assam 5 State Election Schedule Preparation: Commission Commission returns in the first week of January
× RELATED பஸ்சில் போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது