ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என காதலன் மிரட்டல்: கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை: திருச்சி அருகே பரபரப்பு

மணப்பாறை: திருச்சி அருகே ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என காதலன் மிரட்டியதால், கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே உள்ள வேம்பனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம். இவரது மகள் பாக்கியலட்சுமி (19). இவர் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பாக்கியலட்சுமி அக்காவின் குழந்தை அழுதது. உடனே, அக்கா தூக்கத்திலிருந்து எழுந்த போது, பாக்கியலட்சுமியை காணவில்லை.

அப்போது, அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று இருந்தது. அந்த கடிதத்தில், “பெண் பெயரில் செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ள ஓர் ஆணின் செல்போன் எண்ணை குறிப்பிட்டு, என் சாவுக்கு காரணமான இவனை விட்டு விடாதீர்கள்”. இவனிடமிருந்து நிறைய பெண்களை காப்பாற்றுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த எண்ணின் வாட்ஸ்அப் சாட்டிங்கில் கல்லூரியில் படிக்கும் பெண்கள் வாட்ஸ்அப் குரூப் மற்றும் ஷேர்சாட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு வீடியோவை அனுப்பவா என அந்த நபர் கேட்பதும், பிளீஸ் அனுப்ப வேண்டாம். அழித்து விடு என பாக்கியலட்சுமி கெஞ்சி கேட்பதும் சாட்டிங்கில் இருந்தது.

இதுகுறித்து வளநாடு போலீசில் பாக்கியலட்சுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் பாக்கியலட்சுமியின் சடலம் மிதந்தது தெரிய வந்தது. போலீசார், இலுப்பூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இருந்த தண்ணீரை இறைத்தனர். பின்னர் பாக்கியலட்சுமியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ‘‘பாக்கியலட்சுமியும், அந்த வாலிபரும் காதலித்துள்ளனர். இருவரும் நெருக்கமாக இருந்த போது, அதை அந்த வாலிபர் செல்போனில் படம் பிடித்துள்ளார்.

பின்னர் அந்த வாலிபரை விட்டு பாக்கிய லட்சுமி விலகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் நெருக்கமாக இருந்த ஆபாசமான வீடியோவை வெளியிடவா என்று அந்த வாலிபர் மிரட்டி உள்ளார். இதன்காரணமாகவே பாக்கிய லட்சுமி தற்கொலை செய்தது தெரியவந்தது. அந்த வாலிபரை உடனே கைது செய்ய வலியுறுத்தி நேற்று இரவு சடலம் மிதந்த கிணற்றுக்கு அருகிலேயே மறியலில் ஈடுபட பாக்கியலட்சுமியின் உறவினர்கள், பெற்றோர் முயன்றனர். முதல்வர் திருச்சிக்கு வருகை தந்திருப்பதால், போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓரிரு நாளில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் மறியல் முயற்சியை அவர்கள் கைவிட்டனர். இதனிடையே வளநாடு போலீசார் அந்த வாலிபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது, சுவிட்ப் ஆப் ெசய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து இதுபற்றி வளநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>