2 மனைவி, 5 குழந்தைகள் இருந்தும் ‘நோ யூஸ்’ நாய் மீது சொத்தை எழுதிவைத்த விவசாயி: கிராம தலைவர்களின் சமாதானத்தால் திருப்பம்

சிந்த்வாரா: மத்திய பிரதேசத்தில் 2 மனைவி, 5 குழந்தைகள் இருந்தும் விவசாயி ஒருவர் தனது சொத்தின் ஒருபகுதியை நாய் மீது எழுதிவைத்துள்ளார். பின்னர் கிராம தலைவர்களின் சமாதானத்தால் உயிலை ரத்து செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பதிவாரா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஓம்நாராயண் வெர்மா (50). இவரது முதல் மனைவி தன்வந்தி வர்மாவுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இரண்டாவது மனைவி சம்பா பாய்க்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மனைவி தனது பிள்ளைகளுடன் கடந்த எட்டு ஆண்டுகளாக தனித்தனி வசித்து வருகிறார். ஓம்நாராயண் வெர்மா, தனது இரண்டாவது மனைவி சம்பா பாயுடன் வசித்து வருகிறார். ஓம்நாராயணனுக்கு 21 ஏக்கர் விவசாய நிலமும் ஒரு வீடும் உள்ளன.

இந்நிலையில், ஓம்நாராயண் தனது ஒரே மகனிடம் ஏற்பட்டுள்ள மன வருத்தத்தால், தனது சொத்தின் ஒரு பகுதியை தனது மகனுக்கு பதிலாக அவர் வளர்த்து வந்த 11 மாத வயதுடைய செல்ல நாய்க்கு எழுதி வைத்துள்ளார். இவர் எழுதியுள்ள சொத்து உயிலில், ‘எனது இரண்டாது மனைவி சம்பா பாய் என்னை அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார். எனது செல்ல நாய் ஜாக்கியும் நன்றாக கவனித்துக்கொள்கிறது. இப்போது நான் நலமுடன் இருக்கிறேன். ஆனால், எனது மரணத்துக்கு பின் செல்ல நாய் அநாதையாகிவிடுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனது செல்ல நாய் அநாதையாகிவிடக்கூடாது என்பதற்காகவும், நன்றாக கவனிக்கப்பட வேண்டுமென்பதற்காகவும் எனது சொத்தை செல்ல நாய்க்கு பிரித்துக் கொடுக்கிறேன். எனது இறுதி மூச்சு வரை இவர்கள் இருவர் மட்டும் என்னை கவனித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். எனது மரணத்திற்கு பின் இவர்கள்தான் எனது இறுதி சடங்கை நடத்துவார்கள். என் மரணத்துக்கு பின் ஜாக்கியை (நாய்) யார் கவனித்துக்கொள்கிறார்களோ அவர்களே நாயின் சொத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார். இந்த உயிலில் 21 ஏக்கர் விவசாய நிலம் உள்பட பல்வேறு சொத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விவரம் முதல் மனைவி மற்றும் ஊர்மக்களுக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவரது மகன் அதிருபதி அடைந்தார். அதனால், ஓம்நாராயணிடம் கிராம தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி தந்தையும், மகனையும் சமாதானம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, நாய் மீது எழுதப்பட்ட உயில் ரத்து செய்யப்படும் என்று ஓம்நாராயண் ஒப்புக் கொண்டார்.

Related Stories:

>