×

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்: லாட்ஜ்களில் முடங்கிய சுற்றுலா பயணிகள்...8 இடங்களில் தடுப்பு அமைத்து போலீஸ் கண்காணிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் லாட்ஜ்களில் முடங்கி உள்ளனர். இதற்கிடையே சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்கும் வகையில் போலீசார் 8 இடங்களில் தடுப்பு அமைத்து கண்காணித்து வருகின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் ஆண்டு தோறும் புத்தாண்டை கொண்டாட தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் குவிவது வழக்கம். இதனால் அங்குள்ள நூற்றுக்கணக்கான லாட்ஜ்கள் நிரம்பி வழியும். ஆடல் பாடல், கலை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு களைகட்டும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே புதிய வகை கொரோனா பரவல் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தளர்வு செய்யப்பட்ட விதிமுறைகள் மீண்டும் கடினமாகும் சூழல் நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் 2021 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனால் லாட்ஜிகளில் ஆடல் பாடல், கலை நிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி உள்ளிட்ட கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.  இருப்பினும் கன்னியாகுமரியில் வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் லாட்ஜிகள் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தங்களது அறைகளில் இருந்து புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டும்.  கடற்கரையில் சுற்றவும், ரோட்டில் புத்தாண்டு கொண்டாடங்களில் ஈடுபடவும் தடை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதன்படி கன்னியாகுமரி பகுதியை சுற்றி உள்ள நுழைவு பகுதிகளான அஞ்சுகுளம், வால்குளம் உள்ளிட்ட  8 இடங்களில் ேபாலீசார் தடுப்பு அமைத்து கண்காணித்து வருகின்றனர். அதன்படி ஒவ்வொரு இடத்திலும் ஒரு எஸ்ஐ தலைமையில் 15 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

 அதன்படி இரவு 8 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல அனுமதி ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் நாளை (1ம் தேதி) கன்னியாகுமரி, சொத்தவிளை, பொழிக்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2020ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை காண ஆர்வம்

கன்னியாகுமரியில்  புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீஸ் தடை விதித்து உள்ள நிலையில், இந்த  ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை காண இன்று காலை ஏராளமான சுற்றுலா பயணிகள்  கடற்கரையில் திரண்டனர். அதிகாலை  கடற்கரை படித்துறையில் அமர்ந்த சுற்றுலா  பயணிகள் குடும்பமாக சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். அப்போது சூரிய உதய  காட்சியை செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் கடலில்  புனித நீராடிவிட்டு பகவதியம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பூம்புகார்  படகில் சென்று 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை கண்டு  மகிழ்ந்தனர்.

Tags : lodges ,Kanyakumari ,places , Tourists disappointed in Kanyakumari: Tourists paralyzed in lodges ... Police surveillance set up barricades at 8 places
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!