×

சத்தியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை துவக்கம்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதியிலுள்ள செண்பகபுதூர், பெரியூர், ஜல்லியூர், நஞ்சப்பகவுடன் புதூர், அரியப்பம்பாளையம், கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 10 மாத பயிரான மரவள்ளி தற்போது, சத்தியமங்கலம் பகுதியில் அறுவடை பணி தொடங்கி உள்ளது. இதற்காக, சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து மரவள்ளி அறுவடை செய்வதற்கான கூலி தொழிலாளர்கள் முகாமிட்டு அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளையும் மரவள்ளி கிழங்குகள் அறுவடை செய்யப்பட்டு சேலம் நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்தாண்டு, இதே சீசனில் மரவள்ளி கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.6500 முதல் ரூ.7000 வரை விலை போனது.

ஆனால், இந்தாண்டு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதால் டன்னுக்கு ரூபாய் 2,000 வரை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்தாண்டு மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.4500 முதல் ரூ.5000 வரை மட்டுமே விலை போவதாகவும், கடந்தாண்டு ஏக்கருக்கு 15 டன் வரை விளைச்சல் கிடைத்த நிலையில் இந்தாண்டு 12 டன் வரை மட்டுமே விளைச்சல் கிடைத்துள்ளதாவும், இதனால், எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்றும் மரவள்ளி பயிரிட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags : Start of cassava harvest in Satyam: Farmers suffer due to fall in prices
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை