×

தமிழகம் முழுவதும் நாளை அமலாகிறது; பொது சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் பதிவு: கையொப்பமிடும் முறை இன்றுடன் நிறைவு

நெல்லை: தமிழகம் முழுவதும் பொது சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு முக அடையாளம் மூலம் பயோ மெட்ரிக் பதிவு நாளை (ஜன.1) முதல் அமலுக்கு வருகிறது. கையொப்பமிடும் முறை இன்றுடன் (31ம் தேதி) நிறைவு பெறுகிறது. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், அரசு நிறுவன ஊழியர்கள் பணிக்கு வந்தவுடன் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடும் முறை காலம், காலமாக அமலில் உள்ளது. இந்நிலையில் கை விரல் மூலம் பயோமெட்ரிக் பதிவு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்தது. முதலில் ஒரு சில அரசு, தனியார் அலுவலகங்களில் இந்த பயோமெட்ரிக் பதிவு முறை பயன்படுத்தப்பட்டு வந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக விரல் ரேகை பயோமெட்ரிக் பதிவு பல இடங்களில் கடந்த 9 மாதங்களாக பயன்பாட்டில் இல்லை. அதே நேரத்தில் முக அடையாள பயோமெட்ரிக் பதிவு தனியார் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் பயோமெட்ரிக் இயந்திரத்தை தொட வேண்டிய அவசியம் இல்லை என்பதால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பில்லை. எனவே நாளை (ஜன.1ம் தேதி) முதல் பொது சுகாதாரத் துறையின் கீழ் வரும் அனைத்து மருத்துவமனைகள், அலுவலகங்களிலும் முக அடையாள பயோமெட்ரிக் பதிவு முறை அமலுக்கு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றம் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தற்போது நடைமுறையில் உள்ள கையொப்பமிடும் வருகைப்பதிவேடுகள், அதாவது வருகைப்பதிவேடு, தாமத வருகைப்பதிவேடு, சிறப்புப்பணி பதிவேடு, முறைப்பணி பதிவேடு அனைத்தும் இன்றுடன் (டிச.31ம் தேதி) நீக்கப்படுகிறது. 1.1.2021 முதல் அனைத்துப் பணியாளர்கள் மற்றம் அலுவலர்கள் தங்களது வருகையை பதிவு செய்ய முக அடையாள பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் பதிவாகும் நேரத்தைக் கொண்டே வருகை அல்லது தாமதம் என்று கணக்கிடப்படும்.

விடுப்பு, அனுமதி போன்றவையும் பயோமெட்ரிக் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளப்படும். பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் சார்ந்த அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் காலை, மாலை இரு வேளைகளிலும் தவறாது முக அடையாள பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டின் முன் நின்று தங்கள் வருகையை பதிவு செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும். காலை நேரம் மட்டும் பதிவு செய்து விட்டு, மாலை நேரம் பதிவு செய்யத் தவறினால் அந்தப் பணியாளர் மற்றும் அலுவலரின் வருகை முழுமை அடையாது. எனவே பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் சார்ந்து அனைத்து அலுவலர்கள் மற்றம் பணியாளர்கள் காலை, மாலை இரு வேளைகளிலும் தவறாது முக அடையாள பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டின் முன்பு நின்று தங்கள் வருகையை பதிவு செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Effective tomorrow across Tamil Nadu; Biometric Registration for Public Health Employees: The signing process ends today
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...