×

கடந்த 6 வருடங்களில் 10 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கும் பணிகள் தொடக்கம்: பிரதமர் மோடி உரை.!!!

டெல்லி: ரூ.1,195 கோடி மதிப்பில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, புதிய வருடம் பிறக்கவிருக்கிறது. ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதன் மூலம் குஜராத் உட்பட நாடு முழுவதும் சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வி வலுவடையும் என்று தெரிவித்தார்.

இந்த தேசிய சுகாதார வசதியுடன் 2020ஆம் ஆண்டு நிறைவடைவது, இந்த ஆண்டின் சவால்களை முன்னிலைப்படுத்துவதோடு, புதிய வருடத்திற்கான முன்னுரிமையையும் குறிக்கிறது. உடல் நலம் பாதிக்கப்படும்போது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. குடும்பம் மட்டுமல்லாமல் முழு சமூக வட்டமும் பாதிக்கப்படுகிறது.

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து தொடர்பாக இந்தியாவில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பு மருந்தை கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நிலைகளில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. லட்சக்கணக்கான மருத்துவர்கள், சுகாதார போராளிகள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் கொரோனா முன்கள வீரர்களை நினைவு கூறும் தினமாக ஆண்டின் கடைசி நாளான‌ இன்று அமைகிறது. பணியின் போது உயிர்நீத்த தோழர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.

மிகவும் நெருக்கடியான நிலையிலும் அனைவரும் ஒன்றாக இருந்தால் அதை நாம் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்பதை இந்த வருடம் எடுத்துக் காட்டியிருக்கிறது. இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையாக தக்க தருணத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டதால் இன்று சிறப்பான நிலையில் நாம் உள்ளோம். 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் கோவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

2020-ஆம் ஆண்டு முழுவதும் மாற்றம், அக்கறை, கேள்விக்குறிகள் நிறைந்ததாக இருந்தது. 2021-ஆம் ஆண்டு தீர்வுக்கான நம்பிக்கையை அளிக்கிறது. தடுப்பு மருந்து தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 6  வருடங்களில் 10 புதிய #AIIMS  உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டு அவற்றில் சில இயங்கத் தொடங்கிவிட்டன. எய்ம்ஸ் தவிர, நாட்டில் 20 பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

குஜராத்தில் கடந்த 2 தசாப்தங்களில் உருவாக்கப்பட்ட மருத்துவ உள்கட்டமைப்புகளே, கொரோனாவுக்கு எதிராக குஜராத் சிறப்பாக செயல்பட முக்கிய காரணியாக அமைந்துள்ளது என்றார்.


Tags : hospitals ,AIIMS ,speech ,Modi , Construction of 10 new AIIMS hospitals begins in last 6 years: PM Modi's speech !!!
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...