×

வாணியம்பாடியில் விரைவில் இஎஸ்ஐ மருத்துவமனை: மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுகிறது

வேலூர்: ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதி மக்கள் மற்றும் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வாணியம்பாடியில் 50 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. 952ம் ஆண்டு நாடு முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கான சிகிச்சையை அளிக்க இஎஸ்ஐ கார்ப்பரேஷனின் கீழ் மருத்துவமனைகளும், மருந்தகங்களும் தொடங்கப்பட்டன. மருந்தகங்கள், முதன்மை மருந்தகங்கள், மருத்துவமனைகள், பெரிய மருத்துவமனைகள் என இயங்கி வருகின்றன. இம்மருத்துவமனைகள் மூலம் மட்டும் 7 கோடி தொழிலாளர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் மருத்துவ வசதியை பெற்று வருகின்றனர்.

இதற்காக இஎஸ்ஐ கார்ப்பரேஷனுக்கு தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் பங்களிப்பாக தொழிலாளியின் ஊதிய விகிதத்தில் இருந்து மொத்தம் 6.5 சதவீதம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் 8 இஎஸ்ஐ மருத்துவமனைகளும், மத்திய இஎஸ்ஐ கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் ஒரு மருத்துவமனையும், சென்னை, சேலம், கோவை, மதுரை, மண்டலங்களில் மொத்தம் 189 மருந்தகங்கள் இயங்கி வருகின்றன. இந்த மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் மூலம் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் வேலூரில் 50 படுக்கைகளுடன் தலைமையிட இஎஸ்ஐ மருத்துவமனையும், கோட்டை சுற்றுச்சாலையில் மருந்தகமும் இயங்கி வருகின்றன. இதுதவிர ஆம்பூர், குடியாத்தம், அரக்கோணம், பேரணாம்பட்டு, ராணிப்பேட்டை, வாணியம்பாடி, மேல்விஷாரம், சோளிங்கர் ஆகிய நகரங்களில் இஎஸ்ஐ மருந்தகங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகள், தோல் பொருள் தொழிற்சாலைகளில் பணியாற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நலன் கருதி ஆம்பூர் அல்லது வாணியம்பாடியில் 50 படுக்கைகளுடன் கூடிய இஎஸ்ஐ மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வருகிறது.

இக்கோரிக்கையின் அடிப்படையில் இவ்விரு இடங்களிலும் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் வாணியம்பாடி நகரில் 50 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனையை தொடங்க சேலம் மண்டல இஎஸ்ஐ கார்ப்பரேஷன் நிர்வாகம் அரசுக்கு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் வாணியம்பாடியில் 50 படுக்கைகளுடன் கூடிய இஎஸ்ஐ மருத்துவமனை தொடங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதன் மூலம் வாணியம்பாடி, ஆம்பூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், பேரணாம்பட்டு, ஜோலார்பேட்டை, ஆலங்காயம், மாதனூர், நாட்றம்பள்ளி பகுதிகளை சேர்ந்த தோல் தொழில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களும், பிற தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்களும், பீடித்தொழிலாளர் குடும்பங்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு பூர்த்தியடையும் என்று தொழிற்சங்கங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.


Tags : ESI Hospital ,Vaniyambadi , ESI Hospital coming soon in Vaniyambadi: The long standing demand of the people is being fulfilled
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...