நிரந்தர கடைகள் கட்டப்படுமா? அடிப்படை வசதிகள் இல்லாத திருச்செந்தூர் மார்க்கெட்: வியாபாரிகள் பொதுமக்கள் பாதிப்பு

திருச்செந்தூர்: அடிப்படை வசதிகளின்றி காணப்படும் திருச்செந்தூர் மார்க்கெட்டில் நிரந்தர கடைகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். கோயில் நகரமான திருச்செந்தூரில் பகத்சிங் பேரூந்து நிலையம் அருகில் காந்தி தினசரி மார்க்கெட் உள்ளது. இங்கு காய்கனி, மளிகை, கோழி இறைச்சி, மீன், கருவாடு கடை என 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மார்க்கெட்டிற்கு உள்ளூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து காய்கனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் இந்த மார்க்கெட்டில் குடிநீர், மின்சார வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மார்க்கெட் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு வியாபாரிகள் அவர்கள் வசதிக்கேற்ப கூரை மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட் அமைத்து கடை வைத்துள்ளனர். மார்க்கெட் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சென்று வருகின்றனர். மேலும் இதன் அருகில் ஏஎஸ்பி அலுவலகம், திருக்கோயில் காவல்நிலையம், மாணவர் விடுதி ஆகியவையும் உள்ளன. சாலை வசதி இல்லாததால் மழைக் காலங்களில் மழைநீர் புகுந்து வெளியேற வழியில்லாமல் மார்க்கெட் முழுவதும் சகதிகாடாக மாறி விடுகிறது. கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து விடுவதால் காய்கனி உள்ளிட்டவை அழுகி பெருத்த அளவில் நஷ்டம் ஏற்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 மழைக்காலத்தில் தான் இப்படி என்றால் வெயில் காலங்களிலும் சாலை வசதியில்லாததால் காற்றில் புழுதி படலமாக மாறி விடுகிறது. இதனால் காய்கனி உள்ளிட்டவைகளிலும் தூசி படர்ந்து காணப்படுகிறது. பெரும்பாலான கடைகள் கூரை வேயப்பட்டு இருப்பதால் இதுவரை 5க்கும் மேற்பட்ட முறை தீப்பிடித்துள்ளது. எனவே மார்க்கெட்டில் நிரந்தர கடைகள் கட்டித்தரக் கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் இங்குள்ள வியாபாரிகள் பலமுறை மனு கொடுத்துள்ளனர். மார்க்கெட்டில் நிரந்தரக் கடைகள் கட்டிக்கொடுத்து சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும் என்பதே வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.

அளவீடு முடிந்தது

கடந்த 2 மாதங்களுக்கு முன் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் காந்தி தினசரி மார்க்கெட்டில் புதிய கடைகள் கட்டப்போவதாக கூறி அளவீடு செய்தனர். ஒரு கடை 8க்கு 8 என்ற அளவில் கட்டப்படும் என்று கூறப்பட்டது. 8க்கு 8 என்ற அளவு மிகவும் சிறிய கடையாக இருக்கும் என்றும், எனவே 10க்கு 10 என்ற அளவில் கடை கட்டித்தர வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். அளவீடு செய்த பேரூராட்சி நிர்வாகம், கடைகள் கட்டுவது குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

Related Stories:

>