நாசரேத்தில் நித்தமும் தவிப்பு: ஊரை காக்கும் போலீசாருக்கு குடியிருப்பு மட்டும் இல்லை

நாசரேத்: நாசரேத்தில் காவலர் குடியிருப்பு அமைக்கப்படாததால் போலீசார் மிகுந்த சிரமத்தில் இருந்து வருகின்றனர். காவலர் குடியிருப்பு அமைக்க ஏற்ற இடம் இருந்தும் அமைக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள   நகரமாக நாசரேத் விளங்கி வருகிறது. இதனை சுற்றி ஏராளமான கிராமங்களும், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம், புன்னையடி வனத்திருப்பதி கோயிலும் உள்ளது. நாசரேத் மையப்பகுதியாக உள்ளதால் அதிகமானோர் வந்து செல்லும் பகுதியாகவும் விளங்குகிறது. நாசரேத் கல்வி நிறுவனங்கள் நிறைந்து காணப்படுவதால் காவல் துறை முதல் அனைத்து துறை அதிகாரிகளும் நாசரேத்தில் பணிபுரிய ஆவலுடன் வருவது வழக்கம்.

சாத்தான்குளம் உட்கோட்டத்தில் நாசரேத் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த உட்கோட்டத்திற்கு உட்பட்ட சாத்தான்குளம், தட்டார்மடம், மெஞ்ஞானபுரத்தில் போலீஸ் ஸ்டேஷனும், அதில் பணிபுரியும் போலீசாருக்கு காவலர் குடியிருப்புகளும் உள்ளன. ஆனால் நாசரேத்தில் காவல் நிலையம் இருந்தும், காவலர்குடியிருப்பு இல்லாமல் இருப்பது காவலர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை உருவாக்கி வருகிறது. நாசரேத் காவல் நிலையத்தில் ஒரு ஆய்வாளர், 4 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 37 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். நாசரேத்தில் காவலர் குடியிருப்பு இல்லாததால் புதிதாக பணிபுரிய வரும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை வீடு கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாக வேண்டிய நிலை தொடர்கிறது.

நாசரேத் ஊருக்கு வெளியே வீடு கிடைத்தால் சில நேரம்  பணிக்கு வந்து செல்வதில் தாமதம் ஆவதுடன் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு பணிய வேண்டிய நிலை உள்ளதாக காவலர்கள் புலம்புகின்றனர். காவல் நிலைய காவலர்களுக்கென குடியிருப்பு இருந்தால் காவலர்களுக்கான அனைத்து வசதிகளும் இருக்கும். ஆதலால் காவலர்கள் உடனடியாக சென்று ஓய்வு எடுத்துக் கொண்டு பணிக்கு திரும்பும் நிலை இருக்கும். காவல் நிலையத்தில் காவலர்கள் ஓய்வு எடுக்கும் அறை இருந்தாலும் போதிய வசதிகள் இல்லை. எனவே நாசரேத் காவலர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நாசரேத்தில் காவலர் குடியிருப்பு அமைக்க காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் விரும்புகின்றனர்.

இதுகுறித்து நாசரேத் நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் பீட்டர் கூறுகையில், ‘நாசரேத்தில் காவல் நிலையம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. ஆனால் காவலர் குடியிருப்பு அமைக்கப்படாததால் காவலர்கள் வெளிபகுதியில் இருந்து காவல் நிலையம் வந்து செல்லும் நிலை உள்ளது. காவலர் குடியிருப்பு கட்ட நாசரேத்தில் இடம் தயார் நிலையில் உள்ளது. எனவே மாவட்ட எஸ்பி மற்றும் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக காவலர் குடியிருப்பு அமைக்க நடவடிக்கை எடுத்து காவலர்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்’ என்றார். 

Related Stories:

>