×

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க கோரிக்கை

ஈரோடு: ஈரோட்டில் இருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் ஈரோடு மாநகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டு, ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜெ.சுரேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோட்டில் இருந்து சேலம் மார்க்கமாக சென்னைக்கு தினமும் இரவு 9 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் சேவை கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டு, கடந்த 9 மாதங்களாக இயக்கப்படாமல் உள்ளது.

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நேரடியாக சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த ஒரே ரயில், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில்தான். மத்திய, மாநில அரசுகள் கொரோனா ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளித்து பல்வேறு ரயில் சேவைகளை மீண்டும் துவக்கி உள்ளது. இதில், ஈரோடு மார்க்கமாக பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க பல வகையில் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் தொடர்ந்து இயக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இதைக்கண்டித்தும், உடனடியாக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று மாநகர் முழுக்க பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டி ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளோம். ரயில்வே நிர்வாகம் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கா விட்டால் அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Yercaud Express , Request to run Yercaud Express train
× RELATED ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க கோரிக்கை