×

சேர, சோழ மன்னர்கள் ஆண்ட பெருமை மிகு பூமி சதுர்வேதி மங்கலம் என்று புகழ்பெற்ற சேலம்: அசரவைக்கும் வரலாற்று சிறப்புகள் ஏராளம் வளர்ச்சிக்கு மேலும் கட்டமைப்புகள் அவசியம்

‘‘நிகழ்வுகளை விட, அந்த நிகழ்வுகளால் பதிந்திருக்கும் நினைவுகளே என்றென்றும் நிலைத்திருக்கும் பொக்கிஷங்கள். இப்படி பண்பாடும், கலாச்சாரமும் நிலைத்திருக்கும் தமிழ்நிலத்தில் ஒவ்வொரு பகுதியும் அளப்பரிய பெருமைகளை கொண்ட அரிய பொக்கிஷமாக திகழ்கிறது. இந்த பகுதிகள் குறித்து நாம் அறிந்த, அறியாத தகவல்களை நினைவலைகளில் சுழல வைப்பதற்காக வருகிறது இந்த ‘பிளாஷ்பேக்,’’ ‘‘மலைகள் சூழ்ந்த மாநகரம் என்பதால் சைலம் என்று அழைக்கப்பட்டு, அதுவே சேலம் என்று உருமாறியது.  சேரர்கள் ஆண்ட ஊர் என்பதால் சேரலம் என்று அழைக்கப்பட்டு, அதுவே சேலம் என்று  பெயரெடுத்தது. பண்டைய நாட்களில் இது, சோழ நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.

அவர்களின் ஆட்சி காலத்தில் ராசாச்சாரிய சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. அந்த சதுர்வேதி மங்கலமே சேலம் ஆனது,’’ என்பதெல்லாம் நமது ஊருக்கான பெருமை மிகு பெயர்க்காரணம். 13ம் நூற்றாண்டில் இப்பகுதி, தனியொரு ஆட்சிப்பரப்பாக உருவாகி சேலம் நாடு எனப் புகழ்பெற்றது. ஆனால் சேலத்தின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கோடாரிகள், சுத்திகள், பானைகள், தேய்ப்பு கற்கள், வளையல்கள் போன்றவை இங்கு கிடைத்திருப்பதே இதற்கு சான்றாகும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து 17ம் நூற்றாண்டுவரை பாண்டியர்கள், பல்லவர்கள், ஹொய்சாளர்கள், மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சேலம், 18ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மொகலாய மன்னர், ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக மாறியது. பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனி படைக்கும், திப்பு சுல்தானுக்கும் இடையே 1792ல் நடந்த போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் திப்புவிடமிருந்து பெறப்பட்ட பகுதிகளை கொண்டு 1792ல் பாராமஹால் என்னும் சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரும் மாவட்டமான சேலம் பாராமஹால் மாவட்ட கலெக்டராக அலெக்சாண்டர் ரீடு நியமிக்கப்பட்டார்.

1858ம் ஆண்டு நவம்பர் 1ம்தேதி சேலம் நகராட்சி நிர்வாகம் தோற்றுவிக்கப்பட்டது. 1917ல் சேலம் நகரசபை தலைவராக பதவியேற்ற மூதறிஞர் ராஜாஜி, பின்னாளில் சென்னை மாகாண முதல்வர், இந்தியாவின் கவர்னர் ஜெனரல் போன்ற உயர்பதவிகளை வகித்தார் என்பது பெருமைமிகு வரலாறு. 1994ம் ஆண்டு சேலம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 60 வார்டுகளை உள்ளடக்கிய சிறப்பு மிகு மாநகராட்சியாக திகழ்கிறது. தமிழகத்தின் 5வது பெரிய நகரமாக திகழ்ந்தாலும் பகட்டு இல்லாத எளிய மனிதர்கள் வாழும் மண்ணாகவே இன்றுவரை சேலம் திகழ்கிறது.

மகாத்மாவின் வருகை, நேருவின் விசிட், ராஜாஜியின் அதிகாரம், பெரியாரின் போராட்டம், அண்ணாவின் உரைவீச்சு, எம்ஜிஆர், கலைஞர் என்று முத்தான தலைவர்கள் தங்கிச்சென்ற பெருமிதம் என்று பல்வேறு புகழ் மகுடங்களை சூட்டி நிற்கிறது இந்த மாநகரம். முழுக்க, முழுக்க சேலம் நகர பகுதிகளை மட்டுமே உள்ளடக்கிய சேலம் 1வது சட்டமன்றத் தொகுதி 1957ல் உருவாக்கப்பட்டது. இது 2011ல்  தெற்கு தொகுதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஊரகத்தில் விவசாயம் பிரதானம் என்றால், நகர்ப்புறத்தில்  நெசவுத் தொழிலும், வெள்ளி பொருட்கள் உற்பத்தியும் முக்கிய அடையாளங்கள்.

இதை தவிர எழில்மிகு பர்னிச்சர்கள் தயாரிப்பு, மோட்டார் வாகனங்கள் பழுதுபார்ப்பு என்று பல்வேறு தொழில்களில் பளிச்சிடுகிறது சேலம் மாநகரம். ஆனால் இதன் மகத்துவம் உணர்த்தும் வாய்ப்புகளும், வாகை சூடிய வரலாறுகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் நகர முன்னோடிகளின் இதயங்களில் இன்றுவரை ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் மிகஅவசியம்
‘‘சேலம் வரலாறு, பண்பாடு, தொழில்வளம் நிறைந்து உழைக்கும் மக்கள் அதிகம் கொண்ட பகுதியாக விளங்குகிறது. ஆனாலும் பல ஆண்டுகளாக அதன் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படாமல் உள்ளது. குப்பைகளும், குண்டு குழி சாலைகளும் இன்றும் நகரெங்கும் தென்படுகிறது. எனவே அடிப்படை மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டங்களை அதிகாரிகள் துரித கதியில் செயல்படுத்தவேண்டும். இங்குள்ள தொழில்கள் மேம்பட அரசு, தனிக்கவனம் செலுத்த வேண்டியதும் மிகவும் அவசியம் என்கிறார்,’’ மாநகரின் மூத்த சமூக மேம்பாட்டு ஆர்வலர் வேலாயுதம்.

காந்தி தங்கிய தியாகி இல்லம்
1920ம் ஆண்டு சுதந்திர வேட்கை உச்சத்தில் இருந்த  நேரத்தில் சேலம் நகருக்கு வந்துள்ளார் தேசப்பிதா மகாத்மாகாந்தி. இதேபோல் 1934ம் ஆண்டு சேலம் நகருக்கு வந்தவர், அஸ்தம்பட்டியை சேர்ந்த தியாகிநடேசன் பண்டாரம் என்பவரது வீட்டில் தங்கியுள்ளார். அப்போது அவர், ஒரு ராட்டையை சுற்றி, கதரின் பெருமைகளை மக்களிடம் எடுத்துரைத்துள்ளார். காந்தி தங்கிய தியாகி வீட்டின் மேல்தளம் தற்போது அருங்காட்சியகமாகவும், கீழ்தளம் அஞ்சலகமாகவும் செயல்படுகிறது. ஆனாலும் காந்தியின் காலடி பட்ட வரலாற்று சுவடுகள் இன்று வரை பெருமை பேசி நிற்கிறது.

அசர வைக்கும் மாரியம்மன் திருவிழா
சேலம் மாநகரின் மிகப்பெரும் ஆன்மீக அடையாளமாக திகழ்வது கோட்டை மாரியம்மன் திருக்கோயில். பஞ்சம்  தீர்க்க மாரி என்னும் மழையை வாரி வழங்கும் அம்மன் அருள்பாலிக்கும் கோயில் இது. ஆடிமாதத்தில் 22 நாட்கள், கோட்டை மாரியம்மன் திருவிழா நடப்பது வேறு எங்கும் இல்லாத ஒன்று. ஆடி முதல் செவ்வாயில் ஆரம்பித்து கடைசி செவ்வாயில் விழா நிறைவடைவது வியப்பு. இதேபோல் கோட்டை அழகிரிநாதர், சுகவனேஸ்வரர், ராஜகணபதி என்று நகரெங்கும் பிரசித்தி பெற்ற தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு. இதேபோல் ஆடியில் அசரவைக்கும் வண்டி வேடிக்கை விழாவும் வேறு எங்கும் இல்லாத ஒன்று.

செல்லுலாய்டு சிகரம் மாடர்ன் தியேட்டர்ஸ்  
உலக சினிமாவுக்கு வித்திட்ட மாடர்ன் தியேட்டர் சேலம் நகரத்தில்தான் இருந்தது. திருச்செங்கோடு ராமலிங்க சுந்தரம் என்ற  டி.ஆர். சுந்தரம், இதனை 1935ம் ஆண்டு உருவாக்கினார். 1936ல் பண்டித நேருவும், வல்லபாய்படேலும் இங்கு வந்து பார்வையிட்டனர். எம்ஜிஆர், கலைஞர், என்டிஆர், வி.என்.ஜானகி என்று முன்னாள் முதல்வர் 4பேர், இங்கு வந்து தங்கி பணியாற்றினர். கண்ணதாசன், மருதகாசி என்று இறவாக்கவிஞர்களையும், அற்புதமான வெள்ளித்திரை நட்சத்திரங்களையும் ஒளிர விட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்புகள் மட்டுமே தற்போது அதன் நினைவுகளை சுமந்து நிற்கிறது.

150 ஆண்டு பழமையான கிறிஸ்துநாதர் ஆலயம்
சேலம் நகரின் மையத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் அழகுமிளிர அமைந்திருக்கிறது 150 ஆண்டு பழமை வாய்ந்த கிறிஸ்துநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் காணப்படும் கண்ணாடி ஓவியங்கள், கலைப்படைப்புகள் தற்போதும் வரலாற்று சாட்சியாக கண் முன்பு நிற்கிறது. இந்தோ-சார்சானிக் கட்டிடக்கலை பாணியில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இதே பாணியில் மதுரையில் தூயஜார்ஜ் ஆலயம் இருப்பதும் வியப்பு. இதேபோல் குழந்தை இயேசு பேராலயம், தூய இருதய ஆண்டவர் பேராலயம், ஜெயராக்கினி மாதா பேராலயம் என்று ஒவ்வொரு தேவலாயமும் நகருக்கு சிறப்பு சேர்க்கிறது.

திப்பு வழிபட்ட ஜாமியா மஜீத்
சேலம் மாநகரின் மையத்தில் திருமணி முத்தாற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள ஜாமியா மஜீத் மிகவும் பிரசித்தி பெற்றது. பழம்பெருமை கொண்ட இந்த மசூதியை இந்தியப்புலி திப்புசுல்தான் கட்டியதாகவும், அவர் இங்கு வந்து வழிபாடுகள் நடத்தியதாகவும் வரலாறுகள் உள்ளது. இதே போல் கோட்டை, அம்மாப்பேட்டை, சூரமங்கலம், கிச்சிப்பாளையம் என்று நகரெங்கும் பழம் பெரும் மசூதிகள், ஆங்காங்கே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.


Tags : Salem ,land ,kings ,Chaturvedi Mangalam ,Chola , Salem, famous for its Chola kings' glorious land Chaturvedi Mangalam: More Structures Needed for Development
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...