×

6வது சுற்று பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் விவசாயிகளின் 2 கோரிக்கைகள் ஏற்பு: மீண்டும் ஜன.4ம் தேதி ஆலோசிக்க முடிவு; சட்டத்தை ரத்து செய்வதில் அரசு பிடிவாதம்

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்பதில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதால், விவசாயிகளுடன் நடத்திய 6வது சுற்று பேச்சுவார்த்தை முழு வெற்றி பெறவில்லை. இதுதொடர்பாக மீண்டும் ஜனவரி 4ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் விவசாயிகளின் 2 கோரிக்கைகள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில், பஞ்சாப், அரியானா, உபி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். மத்திய அரசு திருத்தங்கள் செய்வதாக கூறுகிறது. இதனால் 5 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. நீண்ட இழுபறிக்குப் பின் 6வது சுற்று பேச்சுவார்த்தை டெல்லி விக்யான் பவனில் நேற்று நடந்தது.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின், பேச்சுவார்த்தைக்கு வந்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர், ‘‘இன்றைய பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படும். புத்தாண்டை விவசாயிகள் அவர்களது வீட்டில் கொண்டாடுவார்கள்’’  என நம்பிக்கை தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்த 41 விவசாய சங்க பிரதிநிதிகள், ‘‘எங்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேறாவிட்டால் 6 மாதம் ஆனாலும் தொடர்ந்து போராட தயார்’’ என்றனர்.

இந்நிலையில், மதியம் 2 மணி  அளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் நடந்த இப்பேச்சுவார்த்தையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்வது, குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்குவது, டெல்லியை சுற்றி பயிர் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை நீக்குவது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்டத்தை முற்றிலும் நீக்குவது என விவசாயிகளின் 4 கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதில், பயிர் கழிவுகளை எரிப்பதற்கு அபராதம் விதிப்பதையும், புதிய மின்சார சட்டத்தையும் நீக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. ஆனாலும், 3 சட்டங்களை நீக்குவதில் மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது. இதற்கு நீண்ட நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், முதலில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி கமிட்டி அமைத்து விவாதித்து முடிவெடுக்கலாம் எனவும் மத்திய அரசு தரப்பில் கூறியதை விவசாயிகள் ஏற்கவில்லை. இதே போல, குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிப்பதாகவும் மத்திய அரசு கூறியதையும் விவசாயிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால் இவ்விரு முக்கிய விவகாரங்களில் முடிவு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடித்துக் கொள்ளப்பட்டது. இதன் பின்னர் பேட்டி அளித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ‘‘விவசாயிகளின் 2 கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. மற்ற 2 விஷயங்கள் குறித்து மீண்டும் வரும் 4ம் தேதி மதியம் 2 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பிரச்னை சுமூகமாக தீர்க்கப்படும்’’  என்றார். இதற்கிடையே, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி, டெல்லி சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் இருந்து விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்த இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* விவசாயிகளின் உணவை சாப்பிட்ட அமைச்சர்கள்
பேச்சுவார்த்தைக்கு வரும் விவசாயிகள் மத்திய அரசு தரும் தண்ணீரை கூட குடிப்பதில்லை. உணவு, தண்ணீர் என அனைத்தையும் அவர்களே ஏற்பாடு செய்து கொண்டு வருவர். அதன்படி, நேற்று கூட்டம் நடந்த 2 மணி நேரத்திற்குப் பிறகு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, விக்யான் பவனுக்கு உணவு, டீ, ஸ்நாக்சை விவசாயிகள் தரப்பிலிருந்து கொண்டு வரப்பட்டது. அவர்களுடன் சேர்ந்து மத்திய அமைச்சர்கள் தோமர், பியூஸ் கோயல், சேம் பிரகாஷ் மூவரும் சாப்பிட்டனர். விவசாயிகள் மத்திய அமைச்சர்களுக்கு உணவை பரிமாறினர். ஏற்கனவே போராட்ட களத்தில் தடியடி நடத்தும் போலீசாருக்கும் விவசாயிகள் உணவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

* பிரதமரின் அசத்தியாகிரகம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஒவ்வொருவர் வங்கி கணக்கில் 15 லட்சம்’, ‘ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்பு’, ‘எனக்கு 50  நாட்கள் கொடுங்கள், அப்புறம் பாருங்கள்...’,‘21 நாளில் கொரோனாவை வெல்வோம்’,  ‘யாரையும் ஊடுருவ விடமாட்டோம், எந்த நிலையையும் அபகரிக்க விடமாட்டோம்’  இப்படியான நீண்ட அசத்தியாகிரக வரலாற்றை கொண்டிருப்பதால் பிரதமர் மோடியை விவசாயிகள் நம்பமாட்டார்கள்’’ என கூறி உள்ளார்.

* பாதிப்பு தெரியுது
பேச்சுவார்த்தைக்கு முன்பாக பேட்டி அளித்த விவசாயிகள், ‘‘உபியில் புதிய வேளாண் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு விளைபொருட்களின் விலை 50 சதவீதம் சரிந்து விட்டது. குறைந்தபட்ச ஆதார விலையை காட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு விளைபொருட்களை வாங்குகின்றனர். அரிசி குவிண்டால் ரூ.800க்கு மட்டுமே விற்கப்படுகிறது’’ என்றனர்.

Tags : round ,negotiations , Progress in the 6th round of negotiations Accepts 2 demands of the farmers: Decision to consult again on Jan.4; The government is adamant in repealing the law
× RELATED சில மாநிலங்களில் பாஜக...