×

ஆங்கில புத்தாண்டு கட்டுப்பாடு எதிரொலி: நட்சத்திர ஓட்டல், ரிசார்ட், பார்கள் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட தடை

* சென்னையில் கண்காணிப்புக்கு 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு
* கட்டுப்பாடு மீறினால் கடும் நடவடிக்கை என கமிஷனர் எச்சரிக்கை

சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்கள், பார்கள், கேளிக்கை விடுதிகள் இன்று இரவு 10 மணிக்கு மேல் இயங்க தடை விதித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் வழக்கமாக ஆங்கில புத்தாண்டு அன்று மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்கள், கேளிக்கை விடுதிகளில் நடன, கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக விடிய விடிய ஆட்டம், பாட்டம் மற்றும் மதுவுடன் கொண்டாட்டங்கள் நடக்கும். ஆனால் இந்த ஆண்டு சென்னை மாநகர காவல் துறை அனைத்து கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களிடம் பேசியதாவது: தமிழக அரசு விதித்துள்ள புத்தாண்டு தடை உத்தரவை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். நோய் தொற்றில் இருந்து தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாப்புடன் வீட்டிலேயே  மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாட வேண்டும். பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்களை கண்காணிக்கவும், பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் மாநகரம் முழுவதும் மக்கள் ஒன்று கூடும் 300 இடங்களில் தேர்வு செய்து தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து, போக்குவரத்து போலீசாருடன் இணைந்து சட்டம் ஒழுங்கு போலீசார் ஈடுபடுவார்கள்.

சென்னை முழுவதும் உள்ள அனைத்து மேம்பாலங்களும் நள்ளிரவில் மூடப்படும். புத்தாண்டுக்கு அரசு விதித்த விதிகளின்படி இன்று இரவு 10 மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்டுகள், கேளிக்கை விடுதிகள், பார்கள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகள் முற்றிலும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி வாகனங்களில் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு பாதுகாப்புக்காக மாநகரம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பாதுகாப்பு நடவடிக்கைகள் புத்தாண்டு நள்ளிரவு வரை நீடிக்கும். தமிழக அரசு உத்தரவை மாநகர காவல் துறை முழுமையாக செயல்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Echo ,resort ,star hotel ,New Year , English New Year, control, ban
× RELATED கொடைக்கானலில் ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர் சங்க கூட்டம்