×

அரியானா மேயர் தேர்தலில் பாஜ கூட்டணி படுதோல்வி: காங்கிரசிடம் வீழ்ந்தது

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பாஜ கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. அரியானா மாநிலத்தில் மூன்று மாநகராட்சிகளின் மேயர்கள், இரண்டு நகராட்சித் தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சோனிபட், அம்பாலா என 2 இடங்களின் மேயர் பதவிகளை பாஜ கூட்டணி பறிகொடுத்துள்ளது. இந்த இரண்டு மேயர் பதவிகளையும் காங்கிரஸ் வென்றுள்ளது. பஞ்ச்குலா மாநகராட்சியை மட்டும் பாஜ கூட்டணி குறைவான வாக்கு வித்தியாசத்தில் போராடி வென்றுள்ளது. துணை முதல்வரான துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி பலமாக உள்ளதாகக் கூறப்படும் உக்லானா, சம்ப்லா மற்றும் தாருகெராவிலும் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது பாஜ கூட்டணி. கடந்த 2018ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்று அதிரடி காட்டியது பாஜ கூட்டணி. இந்நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகள் பாஜ கூட்டணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

கடந்த மாதத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தைக் கையாண்டதற்காக அரியானா முதல்வர் மனோகர் லாக் கட்டார் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். போராடிய விவசாயிகளைக் கலைக்க தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டதாகவும், சில இடங்களில் தடியடி நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் எதிரொலியாகவே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என்று காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வத்ஸ்வா, ‘புதிய வேளாண் சட்டங்களால் பொதுமக்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளனர். அதன் எதிரொலிதான் இந்த தேர்தல் முடிவுகள்’ என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் அதிக வெற்றி  
கர்நாடகாவில் கடந்த 22, 27ம் தேதிகளில் 2 கட்டங்களாக கிராம பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பாஜ வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் 2வது இடத்தையும், மஜத 3வது இடத்தையும் பிடித்துள்ளன. 5,728 கிராம பஞ்சாயத்துகளில் மொத்தம் 91 ஆயிரத்து 339 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதில், 10 ஆயிரத்து 723 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நேற்று அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளில், பெரும்பாலான இடங்களில் பாஜ வெற்றி பெற்றது.



Tags : alliance ,BJP ,Haryana ,Congress , BJP alliance loses Haryana mayoral polls: Congress loses
× RELATED பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட...