வருமான வரி கணக்கு தாக்கல் அவகாசம் ஜன.10 வரை நீட்டிப்பு: நிறுவனங்கள், ஜிஎஸ்டி தாக்கலுக்கும் கெடு நீட்டிப்பு

புதுடெல்லி: தனிநபர்கள் கடந்த 2019-20 நிதியாண்டுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2019-20 நிதியாண்டுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தனிநபர்களுக்கு டிசம்பர் 31ம் தேதி வரையிலும், நிறுவனங்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.  கடந்த 28ம் தேதி வரை சுமார் 4.54 கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். முந்தைய ஆண்டை விட இது குறைவு. முந்தைய ஆண்டில் சுமார் 4.77 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கணக்கு தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதால், வரிசெலுத்துவோர் வசதியை கருத்தில் கொண்டு கெடு தேதி மீண்டும் நீட்டிப்பு செய்யப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

 இதன்படி, இன்றுடன் கெடு முடியும் நிலையில், தனிநபர்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜனவரி 10ம் தேதி வரையிலும், நிறுவனங்களுக்கு மேலும் 15 நாள் நீட்டித்து பிப்ரவரி 15ம் தேதி வரையிலும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

 இதுபோல், 2019-20 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதற்கு மேலும் 2 மாதம் நீட்டிப்பு செய்து பிப்ரவரி 28ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வருமான வரி வழக்குகளில் சுமுகமாக தீர்வு காண விவாத் சே விஸ்வாத் திட்டம் கொண்டு வரப்பட்டது.    மேல் முறையீட்டுக்கான கால அவகாசம் முடியாத நபர்கள், வழக்கு தீர்ப்பாய குழுவிடம் வழக்கு நிலுவையில் உள்ளவர்கள், வருமானவரி ஆணையர் மேல் முறையீடு தொடர்பான திருத்த மனுக்கள் அளித்தவர்கள் இந்த திட்டத்தில் பலன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அவகாசம் ஒரு மாதம் நீட்டித்து, ஜனவரி 31ம் தேதி வரை பலன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>