×

குமரி தேவாலயங்களில் நாளை நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை: ஓட்டல்களில் நிகழ்ச்சிகள் நடத்த தடை

நாகர்கோவில்: புத்தாண்டு பிறப்பையொட்டி, தேவாலயங்களில் நாளை நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கின்றன. குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2020 - ம் ஆண்டு விடை பெற்று, நாளை மறுதினம் 2021ம் ஆண்டு பிறக்கிறது. புத்தாண்டு பிறப்பை மிகவும் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். குமரி மாவட்டத்திலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள், களை கட்டி இருக்கும். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் வெளிமாநில மற்றும் வெளிநாடு பயணிகளும் பெருமளவில் திரள்வார்கள். நட்சத்திர ஓட்டல்களில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தினால், ஓட்டல் நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இதே போல் நாளை (31ம்தேதி), 1ம் தேதி ஆகிய இரு நாட்கள், கடற்கரைகளில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு ெகாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில், சாலைகளில் திரண்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். புத்தாண்டு பிறப்பையொட்டி, தேவாலயங்களில் நாளை நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கின்றன. கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நடைபெறும் புத்தாண்டு பிரார்த்தனையில் பிஷப் நசேரன் சூசை கலந்து ெகாள்கிறார்கள்.

அனைத்து தேவாலயங்களில் புத்தாண்டு பிரார்த்தனைகள் நடக்கின்றன.  புத்தாண்டு பிறப்பையொட்டி மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். முக்கிய சந்திப்புகளில் பேரிகார்டுகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. அனுமதியின்றி நிகழ்ச்சிகள் நடக்கிறதா?  என்பதை கண்காணிக்கவும், சுற்றுலா தலங்கள், கடற்கரைகளில் தடையை மீறி திரள்பவர்களை தடுத்து நிறுத்தும் வகையிலும் சிறப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக எஸ்.பி. பத்ரி நாராயணன் போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

கன்னியாகுமரியில் கூட்டம் அலை மோதல்

கன்னியாகுமரியில் புத்தாண்டை வரவேற்க இப்போதே மக்கள் வரத்தொடங்கி உள்ளனர். அங்குள்ள அனைத்து லாட்ஜ் அறைகளும் நிரம்பி விட்டன. வாகன பார்க்கிங் பகுதிகளிலும் கூட்ட நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகனங்கள் வருகின்றன. சுற்றுலா பயணிகளின் வருகை வியாபாரிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நாளையும், நாளை மறுநாளும் இன்னும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நள்ளிரவு கடற்கரையில் மக்கள் கூடக்கூடாது என அரசு தடை விதித்துள்ளதால் லாட்ஜ் அறைகளிலும், அரங்குகளிலும் புத்தாண்டை கொண்டாட திட்டம் தீட்டி உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை சூரிய உதயத்தை பார்க்க உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான மக்கள் திரண்டனர். இவர்கள் கடற்கரையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கேலரியில் அமர்ந்து சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். இன்று காலை கன்னியாகுமரி கடல் சற்று சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் காற்றும், பெரிய அலைகளும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு இதமளிப்பதாக இருந்தது.



Tags : churches ,hotels ,Kumari ,performances , Special prayers tomorrow at Kumari churches: Ban on performances in hotels
× RELATED தேசிய திருநங்கையர் தினம்: முதல்வர் வாழ்த்து