×

தமிழக அரசு வழங்கிய டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு: நாளை மாலைக்குள் சுற்றறிக்கை வெளியிட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.!!!

சென்னை: பொங்கல் பரிசுக்கான டோக்கன் விவகாரத்தில் சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2.06 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முந்திரி,  திராட்சை, ஏலக்காய், கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும் என்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதை செயல்படுத்த ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

இதில் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத்தொகை ரூ.2,500 விநியோக பணியை வரும் 4ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13ம் தேதி வழங்கி முடிக்க வேண்டும் என்று   அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்யப்படுவதை மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும், நாளொன்றுக்கு முற்பகலில் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் வழங்கும் நாள்,   நேர விவரங்களை குறிப்பிட வேண்டும், வரும் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை டோக்கன்களை வீடுகள் தோறும் நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதன்படி தமிழகம் முழுவதும்  பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் பணி கடந்த 26-ம் தேதி தொடங்கியது.

இருப்பினும், அரசு ஊழியர்கள் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்காமல் அதிமுகவினர் வழங்கி வருவதாக திமுக குற்றம்சாட்டியது. மேலும், ரூ.2,500 பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கனை ரேஷன் கடை ஊழியர்களே தர வேண்டும்  ஆளுங்கட்சியினர் டோக்கன் வழங்குவதால் பரிசுத் தொகை பெரும்பாலானோருக்கு கிடைக்காது. பரிசு தொகை டோக்கனில் அதிமுக தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது தவறானது என்று  திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக இன்று விசாரித்த உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2 இடங்களை தவிர பிற இடங்களில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு டோக்கன்களில் படம், சின்னங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.  மேலும், தமிழக அரசு சார்பில் கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல்துறையால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று ஐகோர்ட்டில் அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. தொடர்ந்து,  அரசின் உத்தரவாதம் தொடர்பாக நாளை மாலை 5 மணிக்குள் சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், நாளைக்குள் சுற்றறிக்கை வெளியிடாவிட்டால் நீதிமன்றத்தை நாட திமுகவுக்கு நீதிபதிகள்  அனுமதி அளித்துள்ளனர்.



Tags : Government ,Government of Tamil Nadu ,iCourt , Pongal gift only for tokens issued by the government: iCourt orders the government to issue a circular by tomorrow evening.
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...