×

மெல்போர்ன் பெருமைக்குரியவர்கள் பட்டியலில் 2-வது முறை பெயர் பொறிப்பு: கிரிக்கெட் ரசிகர்களின் பாகுபலியான ரஹானே.!!!

மெல்போர்ன்: 100 ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் கொண்ட மெல்போர்ன் மைதானத்தின் பெருமைக்குரியவர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் அஜின்கயே ரஹானேவின் பெயர் 2-வது முறையாக பொறிக்கப்பட்டுள்ளது. மேலும்,  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் முதல் முறையாக பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பழங்குடியினரைக் கவுரவப்படுத்தும் பதக்கத்தையும் ஆட்ட நாயகனாகத் தேர்வான ரஹானே பெற்றார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்த இந்தியா, மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 8  விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்ச்சி தொடரை 1-1 எண்ற கணக்கில் சமன் செய்தது.

கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்பியதால், இடைக்கால கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட ரஹானே அடித்த சதம் இந்திய அணியின் வெற்றிக்கு பாலமாக அமைந்தது. தொடர்ந்து போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும்  ரஹானே  பெற்றார். மெல்போர்ன் மைதானத்தில் ரஹானே தனது இரண்டாவது சதம் அடித்துள்ளார். ஏற்கனவே, கடந்த 2014-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ரஹானே 147 ரன்கள் எடுத்திருந்தார்.

இதற்கிடையே, மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் மைதானத்தில் உள்ள பெருமைக்குரியவர்களின் பெயர்ப் பட்டியலில் பொறிக்கப்படும். ஏற்கெனவே  ரஹானேவின் பெயர் கடந்த 2014-ம் ஆண்டில் சதம் அடித்த காரணத்தால் பாரம்பரிய மெல்போர்ன் மைதானத்தின் பெருமைக்குரியவர்களின் பெயர்ப் பட்டியலில் பொறிக்கப்பட்டது.

இந்நிலையில், பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இடைக்கால கேப்டனாக ரஹானே சதம் அடித்தது மட்டுமின்றி அணியை வழிநடத்தி வெற்றி பெற செய்தார். இதனால், 2-வது முறையாக ரஹானேவின் பெயர் பெருமைக்குரியவர்கள் பெயர்ப் பட்டியலில்  பொறிக்கப்பட்டது. இந்த வீடியோவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், ஐசிசியும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளன. பிசிசிஐ அமைப்பும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மெல்போர்ன் மைதானத்தின் பெருமைக்குரிய பட்டியலில், இந்திய வீரர்கள் வினு மன்கட், சுனில் கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரஹானே, விராட் கோலி, சத்தேஸ்வர் புஜாரா ஆகியோரின் பெயர்கள்  பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், 2-வது முறையாக ரஹானே பெயர் மட்டும்தான் மெல்போர்ன் மைதானத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கடந்த 1868-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிகள் சார்பில் ஒரு கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டு, முதல் முறையாக இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விளையாட ஜானி முல்லாக் தலைமையில் அணி சென்றது.வெளிநாட்டுக்கு கிரிக்கெட் விளையாடச் சென்ற முதல் ஆஸ்திரேலிய அணி என்பதால் அந்த அணியின் கேப்டன் முல்லாக்கைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அந்த அணியின் வீரர்கள் படம் பொறிக்கப்பட்ட பதக்கம் முதல் முறையாக பாக்ஸிங்  டே டெஸ்ட்டில் ஆட்டநாயகன் விருது பெறுவோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெருமைக்குரிய, பாரம்பரிய அணியைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்ட பதக்கத்தையும் முதல் முறையாக ரஹானே பெற்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்றார்.



Tags : Rahane ,cricket fans , 2nd name on Melbourne Proud list: Rahane is the victim of cricket fans !!!
× RELATED ரஞ்சிக் கோப்பையை வென்றது மும்பை அணி..!!