பல்லாயிரக்கணக்கில் குவிந்த சுற்றுலா பயணிகள்: புதுவையில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்

* மத்திய உள்துறை எச்சரிக்கை

* திடீர் தடை போடுவதால் பலனில்லை

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கி விட்டன. சுற்றுலா பயணிகள் ஏற்கனவே குவிந்துவிட்டதால், காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகிறது. 31ம்தேதி மாலை முதல் 1ம்தேதி இரவு வரையிலும் நகர பகுதிகளில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை அதிகரிக்கவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனே அடையாளம் காணும் வகையிலும் கடற்கரை சாலை, செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை, பாரதி பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி காமிராக்களை பொருத்தி கண்காணிப்பை அதிகரிக்க கிழக்கு காவல் சரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 இதற்கிடையே முதல்வர் நாராயணசாமியின் உத்தரவுக்கிணங்க புத்தாண்டு பதுகாப்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அண்டை மாநிலமான தமிழகம், கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரியில் புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் கொண்டாட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் புதிய வகை கொரோனா அச்சத்தை சுட்டிக்காட்டி ஜனவரி 31 வரை நடைமுறையில் உள்ள கொரோனா விதிகள் தொடர்வதாகவும்,

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை அனைத்து மாநிலங்களும் கட்டாயமாக பின்பற்ற அறிவுறுத்தி உள்ளார். மேலும் தேவைப்படும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என பரிந்துரை செய்துள்ளார். தலைமை செயலர் அஸ்வனிகுமாரும், இந்த கடிதத்தின் அடிப்படையில் முதல்வரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய உள்துறையின் உத்தரவின் அடிப்படையில் புத்தாண்டு கொண்டாட்டம் திட்டமிட்டபடி நடக்குமா அல்லது ரத்தாகுமா? என்ற குழப்பமான சூழல் நிலவுகிறது. மாநில நிர்வாகி என்ற முறையில் கவர்னர் திடீரென உத்தரவுகளை போடுவதால், அதிகாரிகளும், போலீசாரும் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை உறுதியாக மேற்கொள்ள முடியாமல் பிரபல ஓட்டல், விடுதி நிர்வாகங்கள் தவித்து வருகின்றன. இருப்பினும் ஏற்கனவே வெளிமாநிலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், புதுச்சேரியில் குவிந்துவிட்டதால், தற்போதைய சூழலில் தடைவிதிக்க முடியாது. மேலும ஓட்டல்களில் அனைத்து அறைகளும் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பான புத்தாண்டை கொண்டாடு

வதில் அரசு தீவிரமாக கவனம் செலுத்துகிறது.

அரசு அதிகாரிகளுக்கு கவர்னர் எச்சரிக்கை

புத்தாண்டு ெகாண்டாட்டம் தொடர்பாக புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மீறுபவர்களே முழு பொறுப்பேற்க வேண்டும். மக்களும் தங்களை பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிருங்கள். முகக்கவசம் அணிவது, கிருமி நாசினியால் கைகளை தூய்மைப்படுத்துவது, ஒருவருக்கொருவர் போதிய பாதுகாப்பான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இது வரவிருக்கும் புத்தாண்டுக்கும், பொங்கலுக்கும் மிக அவசியம். ஆட்சியர்கள், முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள்தான் சட்ட அமலாக்க உததரவை நடைமுறைப்படுத்தும் பொறுப்பாளர்களாவார்கள். பாதுகாப்பாக இருங்கள். சட்டங்கள், விதிகள் மற்றும் நீதித்துறை வழிமுறைகளை அமல்படுத்துவதில் உறுதியாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>