×

2,500 ஆண்டுக்கு முந்தைய குத்துக்கல் கண்டுபிடிப்பு

நாமக்கல்: நாமக்கல் அருகே 2,500 ஆண்டுக்கு முந்தைய குத்துக்கல் கண்டறியப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தை செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ., தொலைவில் சாலையோரம் 2,500 ஆண்டுக்கு முந்தைய குத்துக்கல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு கல்லூரி வரலாற்றுதுறை பேராசிரியர் சந்திரசேகர் இந்த குத்துக்கல்லை கண்டுபிடித்துள்ளார். சுமார் 6 அடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண்டதாக குத்துக்கல் இருக்கிறது. இதுகுறித்து பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது: சேந்தமங்கலத்தை சேர்ந்த வேல்பாரி அளித்த தகவல்படி புதன்சந்தை பகுதியில், மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் போது குத்துகல் கண்டறியப்பட்டது.

இந்த குத்துக்கல் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பெருங்கற்காலத்தில் மனிதர்கள் தங்களது நிகழ்கால வாழ்வை விட இறப்புக்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றி அதிக சிந்தனையுடன் இருந்துள்ளனர். மறுபிறவிக் கோட்பாடும், சமூக அந்தஸ்தும் அக்காலகட்டத்தில் உருவான சமூக கூறுகளாக கருதப்படுகிறது. குடியிருப்புகளை விட ஈமக்குழிகளுக்கு மிக முக்கியத்துவத்தை அப்போதைய மக்கள் அளித்துள்ளனர். இறந்தபிறகு இந்த உடலானது மீண்டும் உயிர்ப்பிக்கப்படலாம் அல்லது மறுபிறவி எடுக்கும் என்ற நம்பிக்கை அப்போதைய மக்களுக்கு இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.

இறந்த பிறகு, ஈமக்குழியின் மேல் ஒரு கல்லை நட்டு வைப்பது பழக்கமாக இருந்திருக்கிறது. குத்தி வைப்பதால் இது குத்துக்கல் என அழைக்கப்படுகிறது. இக்கல்லின் உயரத்தைக் கொண்டு அக்கால மக்களின் சமூக அந்தஸ்து அளவிட்டு இருக்கலாம் என்று தொல்லியலாளர்களும், சமூகவியலாளர்களும் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : 2,500-year-old boxing invention
× RELATED மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு...