கனமழையால் 3 ஆயிரம் ஹெக்டேர் மிளகாய் செடிகள் நாசம்; இழப்பீடு தொகை எப்போது கிடைக்கும்?

* கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

* கண்கலங்கும் இளையான்குடி விவசாயிகள்

இளையான்குடி: இளையான்குடி பகுதியில் கனமழையால் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் செடிகள் சேதமடைந்துள்ளன. மிளகாய் விவசாயத்தை காப்பாற்ற அரசு அக்கறை காட்ட வேண்டும். உரிய காப்பீடு வழங்க வேண்டுமென ேகாரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் ஆண்டுதோறும் மிளகாய் சுமார் 4 ஆயிரத்து 500 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. ‘ராம்நாடு முண்டு’ எனப்படும் குண்டு மிளகாய், இளையான்குடி, சாலைக்கிராமம். சூராணம், ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.

கனமழையால் காலி...

நெல்லுக்கு அடுத்தபடியாக செப்டம்பர் மாதத்தில் விதைப்பு பணி தொடருவதால், பெரும்பாலும் கனமழை காலத்தில் பயிர்கள் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. வடகிழக்கு பருவமழை, புயல் காரணங்களால் சுமார் இரண்டாயிரம் ஹெக்டேர் பரப்பளவில், மிளகாய் செடிகள் ஆண்டுதோறும் பாதிப்படைந்து வருகிறது. மிளகாய் சாகுபடியை காப்பாற்ற, அரசு மற்றும் மாவட்ட தோட்டக்கலைத்துறையிடம் போதிய திட்டமிடல் இல்லை. வடிகால் வசதி, வாய்க்கால் பராமரிப்பு குறித்து அக்கறை காட்டுவதே இல்லை.

அழிவில் மிளகாய் விவசாயம்...

மிளகாய் சாகுபடி செய்யும் பகுதிகளில் உள்ள அனைத்து வாய்க்கால்களும் இதுவரை தூர்வாராமல் உள்ளது. மிளகாய் சாகுபடி காலத்திற்கேற்றவாறு வடிகால், வாய்க்கால்களை சீரமைக்கப்படவில்லை. நடப்பாண்டில் இளையான்குடி பகுதியில் மட்டுமே சுமார் 4 ஆயிரத்து 500 ஹெக்டேர் மிளகாய் விவசாயம் சாகுபடி செய்யப்பட்டது. சமீபத்தில் கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழையால், வேர் அழுகல் நோயால் பாதிப்படைந்து, சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் மிளகாய் சாகுபடி பாதிக்கப்பட்டது. விதைப்பு, உழுதல், களை எடுத்தல், மருந்து தெளித்தல், உரம் இடுதல் என ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயி ரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர்.

கனமழையால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்தனர். ஆண்டுதோறும் மிளகாய் சாகுபடிக்கு இன்சூரன்ஸ் பதிவதோடு சரி. எந்த உதவித்தொகையும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை கிடைக்கவில்லை. சென்ற ஆண்டும் மழை நீரினால், பாதிப்படைந்து இன்சூரன்ஸ் பதியப்பட்டது. ஆனால் இதுவரை கிடைக்கவில்லை.

காப்பீடு கிடைக்கலை...

மிளகாய் விவசாயிகள் கூறும்போது, ‘‘நாங்கள் மிளகாய் விவசாயத்தை காப்பாற்றுமாறு மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோ ம். எங்கள் குரலுக்கு அதிகாரிகள் செவி சாய்ப்பதில்லை.

பாதிக்கப்பட்ட மிளகாய் செடிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்குவதாக கூறுவது கண்துடைப்பாக, கானல் நீராகவே உள்ளது. சென்ற ஆண்டு தண்ணீரில் மூழ்கி மிளகாய் விவசாயம் கடும் பாதிப்படைந்தது.

பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு, இதுவரை இன்சூரன்ஸ் தொகை கிடைக்கவேயில்லை. அரசு சார்பில் ஆண்டுதோறும் இன்சூரன்ஸ் பதிவதும், பதிந்த தொகை எப்போது வரும் என விவசாயிகள் ஏங்குவதும் வாடிக்கையாகவே உள்ளது. பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்கிட, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

தோட்டக்கலைத்துறை கொர்ர்ர்

இளையான்குடி பகுதி விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்காமல், தோட்டக்கலைத்துறை தொடர்ந்து அலட்சியம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. மிளகாய் விதைப்பிலிருந்து, செடி, பூ, காய் என எந்த பருவத்திற்கு என்ன உரம், மருந்து, சத்துக்கள், தெளிக்கலாம் என ஆலோசனை பெறுவதில், இளையான்குடி பகுதி விவசாயிகள் ஆண்டுதோறும் விழி பிதுங்கியே உள்ளனர்.

பொதுவாக மிளகாய் செடியில் வேர் அழுகல், நுனிகருகல், புனல் கொட்டுதல், காய் உதிர்வு ஆகிய நோய்கள் தாக்குகின்றன. இதற்கெல்லாம் தனியார் உரக்கடையினர் சொல்லும் மருந்தையே விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். முறையான ஆலோசனைகளை அதிகாரிகள் வழங்கினால்தான் இப்பகுதியில் மிளகாய் விவசாயத்தை பாதுகாக்க முடியுமென விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

‘கடன் வாங்கியும் கலங்கி நிற்கிறோம்’

சமுத்திரம் கிராம விவசாயி கார்த்தி கூறுகையில், ‘‘அரை ஏக்கரில்தான் மிளகாய் விவசாயம் செய்தேன். தொடர் மழையால் செடிகள் அழுகி விட்டன. ரூ.20 ஆயிரம் வரை செலவு செஞ்சும் வீணாகி விட்டது. உரிய இழப்பீடு வழங்க அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். அய்யம்பட்டி விவசாயி கணேசன் கூறுகையில், ‘‘மூன்று ஏக்கரில் மிளகாய் பயிரிட்டேன். மழையால் செடிகள் அனைத்தும் வீணாகிவிட்டது. தோட்டக்கலைத்துறை மூலம் மிளகாய் செடிகள் வாங்கி நட்டும் வளர்ச்சி இல்லை. மகசூல் அடியோடு பாதித்துள்ளது. விதைப்பு முதல் மருந்து தெளித்தது வரை சுமார் ஒரு லட்சம் வரை செலவு செய்தும் பயனில்லை’’ என்றார்.

சாலைக்கிராமம் விவசாயி சிவக்குமார் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் மிளகாய் விவசாயம் பாதிக்கப்படுகிறது. அரசு சார்பில் உரிய நடவடிக்கை இல்லை. இந்த ஆண்டும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக கடன் வாங்கி செலவு செய்தும் புண்ணியமில்லை. ஆண்டுதோறும் மிளகாய் சாகுபடியில் இழப்பு மட்டுமே உள்ளது. அரசு சார்பில் உறுதிமொழி மட்டுமே சுலபமாக கிடைக்கிறது’’ என்றார்.

Related Stories:

>