பெரியார் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் பெரியார், மேகம், எட்டியாறு, செருக்கல் போன்ற நீர் வீழ்ச்சிகள் உள்ளன. இதில் பெரியார், மேகம் நீர்வீழ்ச்சிகள் மட்டும் சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமாக உள்ளது. மேகம் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டுமானால் நீண்ட தூரம் ஒற்றையடி பாதையில் நடந்து செல்ல வேண்டும். இதனால் மேகம் நீர்வீழ்ச்சிக்கு வாலிபர்கள் கூட்டமே செல்லும். ஆனால் பெரியார் நீர்வீழ்ச்சி வெள்ளிமலை சாலை ஓரத்திலேயே உள்ளதால் புதுவை, கடலூர், விழுப்புரம் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து குளித்துவிட்டு செல்கின்றனர்.

ஆனால் கடந்த ஆண்டு போதிய மழையில்லாமல் நீர்விழ்ச்சி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக கல்வராயன்மலை பகுதியில் பரவலாக பெய்த மழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் சீரான நிலையில் நீர்வரத்து உள்ளது. இதனால் கடந்த சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் மட்டுமல்லாது இதர தினங்களிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர். ஆனால் பெரியார், மேகம் நீர்வீழ்ச்சிகளில் குளிக்க செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. குறிப்பாக குளிக்கும் இடத்தில் கீழே விழுந்துவிடாமல் இருக்க போதிய தடுப்பு கம்பி வலைகள் இல்லை.

குழந்தைகள் குளிக்கும்போது தவறி விழுகின்றனர். அதே போல நீர் அதிகமாக வரும் காலங்களில் நீரின் வேகத்தால் மக்கள் தவறி விழும் நிலை உள்ளது. ஆகையால் மக்கள் அதிகமாக குளிக்க செல்லும் பெரியார் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன்கருதி தடுப்பு கம்பி வேலி அமைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>