×

ரூ.30.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் தடுப்பணை கட்டாதது ஏன்?.. விவசாயிகள் கேள்வி

சீர்காழி: ரூ.30.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் தடுப்பணை கட்டாதது ஏன்? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே தேனூர் கிராமத்தில் பழவாற்றிலிருந்து உப்பனாறு பிரிந்து கொண்டல், வள்ளுவக்குடி, அகணி துறையூர், பணமங்கலம், சட்டநாதபுரம், சீர்காழி, திருநகரி, திருவாலி மண்டபம், காரைமேடு, எடமணல், வழுதலை குடி என 30 கிராமங்களை கடந்து 20 கிலோ மீட்டர் பயணித்து திருமுல்லைவாசல் கடலில் கலக்கிறது. இந்த ஆறு, விவசாயிகளுக்கு வடிகாலாகவும், பாசனத்திற்கும் பயன்பெற்று வருகிறது. ஆண்டு தோறும் உப்பனாற்றில் 5 ஆயிரம் முதல் 22 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் வீணாக கலந்து வருகிறது.

இந்த தண்ணீரை சேமித்தால் தேனூரிலிருந்து திருமுல்லை வாசல் வரை 30 கிராமங்களில் 10,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற முடியும். ஆனால் தண்ணீரை சேமிக்க தடுப்பணை இல்லாததால் விவசாயிகள் தண்ணீரை சேமித்து விவசாயம் செய்ய முடியாததால் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக போட்டு வைத்துள்ளனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடல்நீர் உப்பாவதால் கால்நடைகள் கூட தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. உப்பனாற்றில் வரும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தடுப்பணை கட்ட வேண்டும் என பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து திருநகரி வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் தடுப்பணை கட்ட பொதுப்பணித்துறையினர் திட்ட மதிப்பீடு தயார் செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர். அதன் தொடர்ச்சியாக ரூ.30 கோடியே 96 லட்சம் செலவில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த தொகையை கொண்டு தடுப்பணை கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் பூமிபூஜை பணிகள் தொடங்கியது. பணிகள் தொடங்கிய சில தினங்களில், கட்டுமான பணிகள் தரமாக இல்லை என கொள்ளிடம் தடுப்பணை குழு நிர்வாகிகள் தடுப்பணை கட்டிய இடத்திற்கு சென்று ஆய்வு செய்து பணிகள் தரமானதாக இல்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதனால் விவசாயிகள் தடுப்பணை கட்டும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து விவசாய சங்க தலைவர் இமயவரம்பன் கூறுகையில், சீர்காழி அருகே தேனூர் உப்பனாற்றில் வரும் தண்ணீரை சேமிக்கும் வகையில் தடுப்பணை கட்ட வேண்டுமென விவசாயிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பனாற்றில் வரும் தண்ணீரை தேக்கினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தரிசு நிலங்களாக போடப்பட்டுள்ள விளைநிலங்களில் விவசாயிகள் நடவு பணிகளை தொடங்க முடியும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.

பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக தடுப்பணை கட்டும் பணியை துவங்க வேண்டும் என்றார். கொள்ளிடம் தடுப்பணை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெக.சண்முகம் கூறுகையில், சீர்காழி நகரின் எல்லை வழியாக உப்பனாறு செல்கிறது. இந்த ஆற்றின் நீரை பயன்படுத்தி விவசாயிகள் நடவு பணிகளை செய்து வந்தனர். ஆனால் காலப்போக்கில் கடல்நீர் திருமுல்லைவாசல் முகத்துவாரம் வழியாக உட்புகுந்ததால் நிலத்தடிநீர் உப்பு நீராக மாறியதால் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி தரமான தடுப்பணை நேர்மையான அதிகாரிகளை கொண்டு தடுப்பணை கட்ட வேண்டும் என்றார்.

அனுமதி கிடைத்ததும் பணி துவங்கும்
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஓப்பனாக 5 மீட்டர் தூரத்திற்கு தரையை தோண்டி கான்கீரிட் போட்டு தடுப்பணை கட்ட திட்டம் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தை மாற்றி இயந்திரத்தின் வழியாக 4மீட்டர் அளவுக்கு கான்கீரிட் அமைத்து தடுப்பணை கட்ட திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

Tags : dam ,floodplain backwaters , Rs 30.90 crore allocated Why the dam was not built in the floodplain? .. Farmers question
× RELATED முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு...