×

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் மீண்டும் கர்ப்பம்: ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் மீண்டும் 5 மாத கர்ப்பிணியானதால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே செண்பகபுதூர் ஊராட்சிக்குட்பட்ட மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (30). பனியன் கம்பெனி தொழிலாளி. இவருக்கு வைஜெயந்தி (26) என்ற மனைவியும், நபிஷா (7), தக்சிகா (4) என இரு மகள்களும் உள்ளனர். வைஜெயந்திக்கு கடந்த பிப்ரவரி மாதம் உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் வைஜெயந்திக்கு வயிற்றில் மாற்றம் தெரிந்ததால், உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவரிடம் காட்டினர். அப்போது சிக்கன் சாப்பிட்டதால், வயிற்று கோளாறு உள்ளதாக கூறி மாத்திரை வழங்கி சாக்கு போக்கு சொல்லி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த மகேந்திரன், மனைவி வைஜெயந்தியை அழைத்துக்கொண்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் சென்று பரிசோதித்து பார்த்தார்.
அப்போது வைெஜயந்தி 5 மாத கர்ப்பிணியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை அறிந்த மகேந்திரனும், வைஜெயந்தியும் அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் கர்ப்பிணி பெண் என உறுதிப்படுத்தப்பட்ட பரிசோதனை முடிவு ஆதாரத்துடன் உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர் மற்றும் பணியாளர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகேந்திரன் மற்றும் வைஜெயந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குடும்ப கட்டுப்பாடு செய்ததற்கான சான்றிதழ் வழங்கிய நிலையில், சரிவர அறுவை சிகிச்சை செய்யவில்லையா? என கேள்வி எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவ அலுவலர் மகேந்திரன் மற்றும் வைஜெயந்தி குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் மீண்டும் கர்ப்பிணியான சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்ததோடு அரசு மருத்துவமனைகளில் சரியான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த மருத்துவ அலுவலர் மைக்கேல் கூறியதாவது: குடும்ப காட்டு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்களில் 5 சதவீதம் பேருக்கு இது போன்று மீண்டும் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளது.

இது பற்றி மீண்டும் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் முறையாக பொது சுகாதார துறையிடம் தெரிவிக்கும்போது, அவர்களுக்கு துறையின் மூலம் நிவாரணத் தொகையாக ரூ.30 ஆயிரம் மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும் என்றார்.


Tags : Relatives ,health center , Woman who underwent family planning surgery becomes pregnant again: Relatives besiege primary health center
× RELATED ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு