15 வயது சிறுமி காதலை ஏற்காததால் 3வது மாடியிலிருந்து குதித்து காவலர் தற்கொலை முயற்சி: கீழ்ப்பாக்கத்தில் பரபரப்பு

சென்னை: கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மணிசங்கர் (22), ஆயுதப்படை காவலர். இவரது தந்தை எழும்பூர் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக உள்ளார். கடந்த 26ம் தேதி மணிசங்கர் தனது குடியிருப்பின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எலும்பு முறிவுடன் ஆபத்தான நிலையில் இருந்த மணிசங்கரை மேல் சிகிச்சைக்காக அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், மணிசங்கர் வசித்து வரும் குடியிருப்பில் ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர் வசித்து வருகிறார். அவரது 15 வயது மகள் பள்ளியில் படித்து வருகிறாள். சிறுமியின் அழகில் மயங்கிய மணிசங்கர், தினமும் பின் தொடர்ந்து காதல் வலை வீசியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலை சிறுமியிடம் கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததுடன், தனது தாயிடம் இதுபற்றி கூறியுள்ளார். உடனே ஆயுதப்படை பெண் காவலர் மணிசங்கரை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிசங்கர் அப்போது ரசாயனத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர்.

அதன் பிறகும், சிறுமி வீட்டில் இருந்து எப்போது வெளியே வந்தாலும், மணிசங்கர் பின் தொடர்ந்து காதல் டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் சிறுமி, மணிசங்கர் காதலை ஏற்று கொள்ளவில்லை. வழக்கம்போல் கடந்த 26ம் தேதி தனது காதலை சிறுமி மற்றும் அவரது தாயிடம் கூறியுள்ளார். அதற்கு பெண் காவலர், ‘‘எனது மகளுக்கு தற்போது 15 வயது தான் ஆகிறது. அவள் பள்ளி படிப்பே இன்னும் முடிக்கவில்லை. அவளை நிம்மதியாக படிக்க விடு. அப்படியே இருந்தாலும் உனக்கு எனது மகளை நான் திருமணம் செய்து கொடுக்க மாட்டேன். ஏன் தேவையில்லாமல் எனது மகளை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறாய்,’’ என்று திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிசங்கர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>