×

இறந்தவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.4 கோடி நிலத்தை அபரிக்க முயற்சி: 2 பேர் கைது

வேளச்சேரி: அடையாறு கஸ்தூரிபா காந்தி நகரை சேர்ந்த எவாலின் கேளிப் என்பவருக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்பிலான 2,880 சதுரடி வீட்டுமனை அதே பகுதியில் உள்ளது. இவர், இறந்ததையடுத்து, அவரது வாரிசு நிர்மலின் சந்திரிகா ப்யூட்லர் அந்த இடத்தை தனது பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்துள்ளார். தற்போது இவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதால், கிழக்கு தாம்பரம் திருமங்கை மன்னர் தெருவை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரிடம் இந்த நிலத்தைப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். இந்நிலையில், சாலிகிராமம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த நேசன் டிக்சன் கிறிஸ்டோபர் (44), அவரது நண்பர் விருகம்பாக்கம் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த சிவசங்கரன் (45) ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் இந்த இடத்திற்கு உரிமை கொண்டாடினர்.

அப்போது, எவாலின் கேளிப் எங்களுக்கு பவர் பத்திரம் செய்து கொடுத்துள்ளார் எனக்கூறி, ஆவணங்களை காட்டினர். இதுகுறித்து சுவாமிநாதன் அடையாறு துணை கமிஷனர் விக்ரமிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் அந்த இருவரிடம் இருந்த ஆவணங்களை சரி பார்த்தபோது, எவாலின் கேளிப் பெயிரில் போலி ஆவணம் தயாரித்தது தெரிந்தது. இதையடுத்து, நேசன் டிக்சன் கிறிஸ்டோபர், சிவசங்கரன் ஆகிய இருவரையும் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : land ,deceased , Attempt to expropriate Rs 4 crore land by producing fake documents in the name of the deceased: 2 arrested
× RELATED நிலப்பிரச்னையை தீர்த்து வைப்பதாக...