×

கொரோனாவால் மக்கள் விரக்தியில் இருக்கும் போது ரூ.10,000 கோடி செலவில் நாடாளுமன்றம் தேவையா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

திருச்சி: கொரோனா காலத்தில் ஒட்டு மொத்த  மக்களும் வேலையில்லாமல் விரக்தியில் இருக்கும் போது ரூ.10 ஆயிரம் கோடி செலவில் நாடாளுமன்றம் தேவையா? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘‘விடியலை நோக்கி ஸ்டாலின்குரல்’’ 3வது கட்ட பிரசாரத்தை திருச்சி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் துவக்கினார். லால்குடி ரவுண்டானா பகுதியில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: லால்குடி தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக திமுகவை வெற்றி பெற செய்துள்ளீர்கள். 4வது முறையாகவும் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.   

இந்த தொகுதியில் திமுக ஆட்சி காலத்தில் நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் இத்தொகுதி திமுகவின் கோட்டையாக உள்ளது. எனது தாத்தாவும், அன்பிலாரும் நண்பர்கள். அதனால் லால்குடி தொகுதியில் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி அல்ல. இது மோடியின் அடிமை ஆட்சி. பொதுமக்கள் மீது அக்கறையுள்ள ஆட்சியாளர்கள் இங்கு இல்லை. இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் மோடிக்கு அடிமையாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் செய்த ஊழல் பட்டியலை 100 பக்கம் கொண்ட ஆதாரத்துடன் கவர்னரிடம் திமுக தலைவர் ஸ்டாலின்  கொடுத்துள்ளார். அதில் ரூ.700 கோடி ஊழல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி, எப்படி முதல்வர் ஆனார் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் தவழ்ந்து, தவழ்ந்து சென்றுதான் ஆட்சியை பிடித்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றி பெறச்செய்தீர்கள். அது அதிமுகவுக்கும், மோடிக்கும் கொடுத்த அதிர்ச்சி. கொரோனா காலத்தில் ஒட்டுமொத்த  மக்களும் வேலையில்லாமல் விரக்தியில் இருக்கும் போது, புதிய நாடாளுமன்றம் கட்ட ரூ.10 ஆயிரம் கோடியும், இரண்டு சொகுசு விமானங்கள் வாங்க ரூ.7 ஆயிரம் கோடியும் மோடி ஒதுக்கியுள்ளார். இது சரியானது அல்ல. புதிய கல்விக்கொள்கை தேவையற்றது. நீட் தேர்வும் தேவையற்றது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு இருக்காது. ஜெயலலிதா மறைவு குறித்து திமுக ஆட்சிக்கு வந்ததும் விசாரிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : parliament ,Udayanidhi Stalin , Do we need a Rs 10,000 crore parliament when people are frustrated by the corona? Udayanidhi Stalin's question
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...