×

8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி அசத்தல் அடிலெய்டு அவமானத்துக்கு பழிதீர்த்தது இந்தியா: தொடரில் 1-1 என சமநிலை

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி, அடிலெய்டில் அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுத்ததுடன் தொடரில் 1-1 என சமநிலையை எட்டியது. கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தாலும், அடுத்து நடந்த டி20 தொடரில் 2-1 என வென்று பலத்தை நிரூபித்தது. இதைத் தொடர்ந்து பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதி வருகின்றன. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

அந்த போட்டியின் 2வது இன்னிங்சில் இந்தியா வெறும் 36 ரன்னுக்கு சுருண்டது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி ‘பாக்சிங் டே’ டெஸ்டாக மெல்போர்னில் கடந்த 26ம் தேதி தொடங்கியது. பிரசவத்தின்போது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கேப்டன் கோஹ்லி நாடு திரும்பிய நிலையில், அஜிங்க்யா ரகானே தலைமையில் இந்திய அணி கடும் நெருக்கடியுடன் களமிறங்கியது.
டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா, இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 195 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

லாபுஷேன் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். இந்திய பந்துவீச்சில் பூம்ரா 4, அஷ்வின் 3, அறிமுக வேகம் சிராஜ் 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா, 6வது விக்கெட்டுக்கு கேப்டன் ரகானே - ஜடேஜா ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் 326 ரன் குவித்தது. கில் 45, ரகானே 112, ஜடேஜா 57 ரன் விளாசினர். 131 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியது. கிரீன் 17, கம்மின்ஸ் 15 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

கம்மின்ஸ் 22, கிரீன் 45 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆஸ்திரேலியா 103.1 ஓவரில் 200 ரன் எடுத்து 2வது இன்னிங்சை இழந்தது. ஸ்டார்க் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் சிராஜ் 3, பூம்ரா, அஷ்வின், ஜடேஜா தலா 2, உமேஷ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 70 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா 2வது இன்னிங்சை விளையாடியது. மயாங்க் அகர்வால் 5 ரன், புஜாரா 3 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்த நிலையில், கில் - ரகானே ஜோடி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த... இந்தியா 15.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 70 ரன் எடுத்து அடிலெய்டில் அடைந்த அவமானத்திற்கு பழிதீர்த்தது. கில் 35 ரன் (36 பந்து, 7 பவுண்டரி), ரகானே 27 ரன்னுடன் (40 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரகானே ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது டெஸ்ட் சிட்னியில் ஜன.7ம் தேதி தொடங்குகிறது.

இந்தியாவுக்கு ராசியான எம்சிஜி!
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி 4வது வெற்றியை வசப்படுத்தி உள்ளது. வெளிநாட்டு மைதானங்களில் இதுவே இந்திய அணியின் அதிகபட்சமாகும். குயின்ஸ் பார்க் ஓவல் (டிரினிடாட்), சபினா பார்க் (ஜமைக்கா), சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் (கொழும்பு) மைதானங்களில் இந்தியா தலா 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. நேற்றைய வெற்றியால், எம்சிஜியில் இங்கிலாந்து அணியை தவிர்த்து வேறு எந்த அணியும் 3 போட்டிகளுக்கு மேல் வென்றதில்லை என்ற வரலாற்றை இந்தியா மாற்றி எழுதியுள்ளது.
* மெல்போர்ன் டெஸ்டில் ஒரு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் கூட அரைசதம் அடிக்கவில்லை. சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், ஆஸி. அணி 32 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.
* சிராஜ் 2 இன்னிங்சிலும் சேர்த்து 5 விக்கெட் கைப்பற்றியது, ஆஸ்திரேலிய மண்ணில் வெளிநாட்டு அறிமுக பவுலரின் 2வது சிறந்த செயல்பாடாக அமைந்தது. இலங்கையின் லசித் மலிங்கா 6 விக்கெட் வீழ்த்தி முதலிடம் வகிக்கிறார் (2004, டார்வின் முதல் டெஸ்ட்).
* மெல்போர்னில் நடைபெறும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெறும் வீரருக்கு இந்த ஆண்டில் இருந்து ‘முல்லா மெடல்’ வழங்கி கவுரவிக்க உள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்திருந்தது. ஆஸி. பழங்குடியின கிரிக்கெட் வீரர்களை பெருமைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பதக்கத்தை பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமை இந்தியாவின் அஜிங்க்யா ரகானேவுக்கு கிடைத்துள்ளது.
* 2வது டெஸ்டில் அபார வெற்றி பெற்றுள்ள இந்திய அணிக்கு கேப்டன் கோஹ்லி, முன்னாள் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் உட்பட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தலைமை பொறுப்பில் ரகானே தனி முத்திரை பதித்துள்ளார் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டி உள்ளார்.
* ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தலில் இருந்த ரோகித் ஷர்மா, இந்திய அணி வீரர்களுடன் இன்று இணைகிறார்.
* இந்திய பந்துவீச்சை நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் எதிர்கொள்ள ஆஸி. பேட்ஸ்மேன்கள் தவறிவிட்டனர் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் குறை கூறியுள்ளார்.
* மெல்போர்ன் டெஸ்டில் 2 ஓவர்கள் தாமதமாகப் பந்துவீசியதற்காக ஆஸ்திரேலிய அணிக்கு போட்டிக்கான ஊதியத்தில் 40 சதவீத அபராதம் விதிக்கப்பட்டதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 4 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
* சிட்னியில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நீடித்தாலும், 3வது டெஸ்ட் போட்டி அங்கு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
* ஒருநாள், டி20, டெஸ்ட் என 3 வகை கிரிக்கெட்டிலும் தலா 50 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டியில் விளையாடிய 3வது இந்திய வீரர் என்ற பெருமை ஆல் ரவுண்டர் ஜடேஜாவுக்கு (50 டெஸ்ட், 168 ஒருநாள், 50 டி20) கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி (90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி20), தற்போதைய கேப்டன் விராத் கோஹ்லியுடன் (87 டெஸ்ட், 251 ஒருநாள், 85 டி20) அவர் இணைந்துள்ளார்.

Tags : India ,Adelaide ,Aussies , India retaliate for Adelaide humiliation by beating Aussies by 8 wickets: Draw 1-1 in series
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!