2 கட்ட பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று 8 மணிக்கு துவக்கம்: மாலைக்குள் வெற்றி நிலவரம் தெரியவரும்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. மாலைக்குள் வெற்றி நிலவரம் தெரியவரும். மாநிலத்தில் பதவி காலம் முடிந்துள்ள 5 ஆயிரத்து 762 கிராம பஞ்சாயத்துகளுக்கு டிசம்பர் 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த 22ம் தேதி நடந்தது. இதில் 117 தாலுகாகளில் உள்ள 3 ஆயிரத்து 019 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து 48 ஆயிரத்து 048 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 550 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில் 40 ஆயிரத்து 352 பேர் தாங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக 1 லட்சத்து 17 ஆயிரத்து 383 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் கட்ட தேர்தலில் 4 ஆயிரத்து 377 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக நடந்த தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியது.

அதை தொடர்ந்து கடந்த 27ம் ேததி இரண்டாவது கட்டமாக 109 தாலுகாவில் உள்ள 2,709 கிராம பஞ்சாயத்துகளில் மொத்தம் 43,291 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதில் 1,47,649 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில் 34,115 பேர் மனு வாபஸ் பெற்றனர். 3,697 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியாக 39,378 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 1,05,431 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாவது கட்ட தேர்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவாகியது. இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. மாலைக்குள் வெற்றி விவரம் தெரியவந்து விடும்.

கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளவர்கள் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடாமல் சுதந்திரமாக போட்டியிட்டுள்ளனர். இருப்பினும் பாஜ, காங்கிரஸ், மஜத என அரசியல் கட்சிகள் சார்பில் ஆதரவாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளனர். இதில் வெற்றி பெறுபவர்களை வைத்தே, எந்த கட்சியை சேர்ந்தவர்கள் அதிகம் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இன்று வெளியாகும் கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவு மூன்று கட்சிக்கும் பலத்தை நிரூபிக்கும் வகையில் அமையும் என்பதில் மாற்று கருத்தில்லை.

Related Stories:

>