×

கர்நாடக சட்ட மேலவை துணைத்தலைவர் தர்மேகவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவை துணைத்தலைவர் எஸ்.எல். தர்மேகவுடா ரயிலில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில சட்ட மேலவை துணைத்தலைவராக இருந்தவர் தர்மேகவுடா (65). சிக்கமகளூரு மாவட்டம், கடூர் தாலுகா, சரப்பனஹள்ளி கிராமத்தில் லட்சுமய்யா-கிருஷ்ணம்மா தம்பதிகளின் மகனான கடந்த 1955 டிசம்பர் 16ம் தேதி  பிறந்தார். பட்டப்படிப்பு படித்துள்ள இவர் பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு பிரூர் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மஜத கட்சியை சேர்ந்த இவர் 2018ம் ஆண்டு கர்நாடக சட்ட மேலவை துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வந்தார்.

சிக்கமகளூரு மாவட்டத்தில் கூட்டுறவு துறையை மேம்படுத்தும் பணியில் அவரது தந்தை லட்சுமய்யா இருந்தார். தந்தை மறைவுக்கு பின், கூட்டுறவு சங்க பொறுப்பை ஏற்ற தர்மேகவுடா, கடூர் மண்டல பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதின் மூலம் அரசியலில் கால் பதித்தார். கடூர் தாலுகா கூட்டுறவு சங்கம், கடூர் தாலுகா பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், சிக்கமகளூரு மாவட்ட கூட்டுறவு சங்கம், சிக்கமகளூரு மாவட்ட கூட்டுறவு வங்கி, கர்நாடக மாநில கூட்டுறவு மகா கழகம், அபேக்ஸ் வங்கி, ஜனதாபஜார் ஆகியவற்றின் தலைவராக இருந்து சிறப்பாக சேவை செய்துள்ளார்.

நஷ்டத்தில் இயங்கி வந்த கூட்டுறவு வங்கிகளை தனது திறமையால் நல்ல லாபத்தில் இயங்கும் வகையில் கொண்டுவந்ததின் மூலம், விவசாயிகள், வங்கி பங்குதாரர்கள் உள்பட அனைவரின் பாராட்டை பெற்றிருந்தார். கூட்டுறவு துறையில் அவரின் சிறப்பான பணியை பாராட்டி கூட்டுறவு ரத்னா உள்பட பல விருதுகள் பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவராக இருந்தார். பல சந்தர்ப்பங்களில் தர்மேகவுடாவிடம் மணி கணக்கில் பேசி ஆலோசனை நடத்தியதும் உண்டு.

இந்தநிலையில், இவர் நேற்று முன்தினம் மாலை சிக்கமகளூருவில் நடந்த விழாவில் கலந்துகொண்டபின், சுகராயனபேட்டையில் உள்ள அவரது பண்ணை தோட்டத்திற்கு சென்று உணவு சாப்பிட்டு ஓய்வு எடுத்தார். பின் அரசு வழங்கிய கார், உதவியாளர்களை பண்ைண தோட்டத்தில் இருக்கும்படி கூறி விட்டு, அவரது சொந்த காரில் டிரைவருடன் கடூருக்கு சென்றார். அங்கு சிலரை சந்தித்து பேசினார். பின் அவரது நண்பர் ஹேமந்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, அவசரமாக பெங்களூரு செல்ல வேண்டும். எந்தெந்த ரயில் எத்தனை மணிக்கு செல்கிறது என்ற விவரம் பெற்று பெற்றுள்ளார். இதை தொடர்ந்து, கடூரில் இருந்து தேவனூர்-குணசாகர சென்ற தர்மேகவுடா டிரைவரை அங்கேயே இருக்க சொல்லி தெரிந்தவரை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்றார். இரவு 11 மணி ஆகியும் அவர் திரும்பி வராததால் டிரைவர் மொபைலில் அழைத்துள்ளார். அவர் பதிலளிக்காததால், அச்சத்தில் தர்மேகவுடாவின் மகன் சோனாலுக்கு தகவல் ெகாடுத்தார்.

இது தொடர்பாக கடூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், தர்மேகவுடாவின் மொபைல் லொகேசனை ஆராய்ந்த போது குணசாகர அடுத்த மங்கேனஹள்ளியை காட்டியது. இதில் சந்தேகம் அடைந்து அங்கு ெசன்று பார்த்தபோது தலை துண்டாகி இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர் ஹுப்பள்ளி-பெங்களூரு சென்ற ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தலை ெகாடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர் பாகதிகவுதம், மாவட்ட போலீஸ் எஸ்.பி. அக்‌ஷய், தர்மேகவுடாவின் சகோதரரும் மேலவை உறுப்பினருமான எஸ்.எல்.போஜகவுடா, சிக்கமகளூரு தொகுதி எம்எல்ஏ சி.டி.ரவி, கடூர் தொகுதி எம்எல்ஏ பெல்லி பிரகாஷ் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீஸ் எஸ்.பி. அக்‌ஷய், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஷிவமொக்கா மாநகரில் உள்ள மெக்கான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். பிரேத பரிசோதனை செய்தபின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தலைவர்கள் இரங்கல்
தர்மேகவுடாவின் மறைவுக்கு முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மஜத தேசிய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி, மேலவை தலைவர் பிரதாப்சந்திரஷெட்டி உட்பட அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் எடியூரப்பா, தேவகவுடா, குமாரசாமி, ஒய்.எஸ்.வி.தத்தா உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின் அவரது உடல் நேற்று மாலை சரப்பனஹள்ளி கிராமத்தில் உள்ள அவரது நிலத்தில் அரசு முழு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்பட்டது.

மரண வாக்குமூலம்
இதனிடையில் தர்மேகவுடா உடல் இருந்த இடத்தில் கடிதம் இருந்ததாகவும், இதில் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் எழுதி வைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டாலும் கடிதம் பகிரங்கப்படுத்தவில்லை. தர்மேகவுடா தற்கொலை செய்து கொண்டது மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தர்மேகவுடா தற்கொலை செய்து கொண்ட தகவல் முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் துக்கம் தாங்காமல் குலுங்கி குலுங்கி அழுதார்.

Tags : Deputy Chief Minister ,Karnataka ,suicide ,arena , Karnataka, Vice-Chancellor of the Legislature, Suicide
× RELATED ஆளுநர் பதவியை விட சுயமரியாதையே...