×

தங்கச்சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை கூறுபோட்டு ஆக்கிரமிக்கும் மாபியாக்கள்

தங்கவயல்: தங்கச்சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமான காலி நிலங்களை சில நில மாபியாக்கள் கூறுபோட்டு ஆக்கிரமித்து லே அவுட்கள் உருவாக்கி வருகிறார்கள். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத தங்கச்சுரங்கம் கடந்த 1880ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2001 மார்ச் 30ம் தேதி மூடப்பட்டது. சுமார் 120 ஆண்டுகள் இயங்கிய சுரங்கத்தின் மூலம் ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான 804 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. சுரங்க பணியில் ஈடுபட்டபோது 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாறை வெடிப்பில் சிக்கியும், மூச்சுதிணறல் காரணமாகவும் சுரங்கத்தில் உயிரிழந்துள்ளனர்.

இப்படி நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்த தங்கச்சுரங்கமும், அதில் பணியாற்றிய தொழிலாளர்களையும் மத்திய, மாநில அரசுகள் அலட்சியமாக ஒதுக்கியுள்ளது. சுரங்கம் மூடப்பட்ட 18 ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றும் இன்னும் முழுவதுமாக செட்டில்மெண்ட் கிடைக்கவில்லை. உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்து இதுவரை ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மீதியுள்ள தொழிலாளர்களிலும் பாதிப்பேர் சிலிகாசிஸ் நோய் கொடுமையால் உரிய சிகிச்சை கிடைக்காமல் நடை பிணமாக வாழ்ந்து வருகிறார்கள்.

தங்க முட்டையிடும் வாத்து:- சுரங்கம் மூடப்பட்டு தொழிலாளர்கள் உரிய பலன் கிடைக்காமல் கஷ்டத்தை அனுபவித்து வந்தாலும் சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளை கூறு போட்டு விற்பனை செய்யும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமான பல விலை உயர்ந்த கட்டிடங்களை இடித்து நாசமாகி வருவதுடன் விலை உயர்ந்த மரங்கள், இரும்பு பொருட்கள் திருடப்பட்டு வருகிறது. சுரங்கம் இயங்கி வந்த சமயத்தில் தங்க படிவங்கள் கொண்ட பாறைகளை அறைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மாரிகுப்பம் மில் மூடப்பட்டிருந்தாலும் தங்க மண் திருடி விற்பனை செய்யும் பணி ஜோராக நடந்துவருகிறது. சில அரசியல் தலைவர்கள், பணக்காரர்கள் கூலியாட்களை வைத்துக் கொண்டு தங்கமண் திருடும் முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமான இரும்பு, செம்பு உலோகங்களை வாங்கி கொடுப்பதாக சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதியில் உள்ள தொழிலதிபர்களிடம் லட்சகணக்கில் பணம் வாங்கி சிலர் ஏமாற்றி வருகிறார்கள். மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை தங்கள்  சொந்த நிறுவனம் என கூறி சிலர் விற்பனை செய்துள்ளதாகவும் புகார் வருகிறது. இதை பார்க்கும்போது, சுரங்கம் மூடப்பட்டாலும் அதன் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் சிலரின் வாழ்க்கை செம்மையாக உள்ளது. உண்மையாக உழைத்த தொழிலாளி குடும்பங்கள் சோற்றுக்கு வழியில்லாமல் அவதியில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியாக உள்ளது.

நில ஆக்கிரமிப்பு:-தங்கச்சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமான 12 ஆயிரம் ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. இந்த நிலத்தில் தொழிற்சாலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த கால் நூற்றாண்டு காலமாக தொழிற்சங்கங்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் உள்பட பலர் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுவரை மக்களின் உணர்வுக்கு ஆட்சியாளர்கள் செவி கொடுக்காமல் செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தை சில நில மாபியாக்கள் தங்கள் சுய லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிஇஎம்எல் ஆலமரம் முதல் கிருஷ்ணாவரம் வரை செல்லும் மாவட்ட நெடுஞ்சாலையில் பிஇஎம்எல் நிறுவனத்தின் எச் அண்ட் பி யூனிட்டை ஒட்டி தங்கச்சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமான பல நூறு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை சில நில மாபியாக்கள் ஆக்கிரமித்துள்ளனர். போலியாக ஆவணங்கள் தயாரித்து நிலம் தங்களுக்கு சொந்தமானது என கூறி லே அவுட் போடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சுரங்க நிறுவன நிலத்தை வளைத்து போட்டுள்ள ஓரிரு நில மாபியாக்கள் அதற்கு காம்பவுண்டு சுவர் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சில மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு அவர்களுக்கு உள்ளதால் சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை கூறு போட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தங்கச்சுரங்க தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வீடு இல்லாதவர்கள் வீடு கட்டினாலோ அல்லது யாராவது கோயில், திருச்சபைகள் கட்ட நிலம் தேர்வு செய்தாலோ கண் இமைக்கும் நேரத்தில் ஓடிவரும் பிஜிஎம்எல் எஸ்டேட் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதை தடுத்து நிறுத்துகிறார்கள். ஆனால் நில மாபியாக்கள் சுரங்கத்திற்கு சொந்தமான நிலம் ஆக்கிரமித்தால் அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது உள்பட எந்த விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது ஏன்? என்ற கேள்வியை பாதிக்கப்பட்ட சுரங்க தொழிலாளர்கள் எழுப்புகிறார்கள். நில மாபியாக்கள் நிலம் ஆக்கிரமிப்பு செய்வதை பார்த்த சில ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களும் தங்கள் தந்தை சுரங்கத்தில் வேலை செய்ததற்கான ஆதாரம் காட்டி சுரங்க நிலம் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

Tags : Mafias ,land ,gold mining company , Goldfields, Gold Mining Company, Mafias
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!