கொரோனா அச்சுறுத்தல் நீடித்தாலும் ஆண்டு முழுவதும் நீதிமன்றங்களில் விசாரணைக்கு தடை இல்லை

புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தலால் லாக்டவுன் மற்றும் அன்லாக் என அரசு நடவடிக்கைகள் நீடித்த போதும், டெல்லியில் நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள் தடையின்றி செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா ஊரடங்கு பிறப்பித்ததை அடுத்து சுழற்சி அடிப்படையில் உச்ச மற்றும் உயர் நீதிமன்ற அமர்வுகள் வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணையைத் தொடர்ந்தன. அதே சமயம் மாநிலத்தின் மாவட்ட நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் வடகிழக்கு டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி உள்பட ஒரு நீதிமன்றத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த நீதிமன்றம் உடனடியாக முடக்கப்பட்டு, அங்கு சானிடைசிங் செய்யப்பட்டது. மேலும் நீதிபதி, ஊழியர்கள், விசாரணைக்கு வந்த போலீசார், வழக்கு தொடர்புடைய ஆட்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா மாதிரி சோதனை மற்றும் தனிமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

அதையடுத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வீடியோ கான்பரன்சிங் முறை அமலுக்கு வந்தது. எனினும், வீடியோ கான்பரன்சிங் முறையை புரிந்து கொள்வது வக்கீல்களுக்கும், போலீசுக்கும், வழக்குதாரர்களுக்கும் தொடக்கத்தில் சிக்கல் நீடித்து பின்னர் சரியானது. அந்த வகையில் மாவட்ட நீதிமன்றங்களில் நிர்பயா குற்றவாளிகளுக்கு இறுதி தீர்ப்பு, தப்லிகி ஜமாத் விவகாரம், வடகிழக்கு டெல்லி கலவர வழக்கு, மத்திய முன்னாள் அமைச்சர் எம் ஜே அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு என ஏராளமான வழக்குகளில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றும், சில வழக்குகளில் தீர்ப்புகளும் வெளியாகி, கொரோனா அச்சுறுத்தல் நிலைமையிலும் ஆண்டு முழுவதும் டெல்லி நீதிமன்றங்கள் பரபரப்பாக வழக்கம் போல செயல்பட்டு வந்துள்ளன.

நிர்பயா வழக்கு

ஏழு ஆண்டாக இழுபறி நீடித்த நிர்பயா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. எனினும் அதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் செய்யப்பட்ட அனைத்து முறையீடுகளையும், முறையிட அவர்களுகு உரிமை உள்ளது என்ற அடிப்படையில் ஏற்று விசாரித்த நீதிமன்றம், தண்டனை தேதியை ஒத்தி வைக்கக் கருதி செய்யும் தந்திரங்கள் என அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து அறிவித்தது.

* நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு மார்ச் 20ம் தேதி விடிகாலை 5.30 மணிக்கு தூக்கு அரங்கேறியது.

* டெல்லியில் தற்போது 4ல் ஒரு மடங்கு நீதிமன்ற அமர்வுகளில் மட்டுமே நேரடி விசாரணையும், 3 மடங்கு நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்சிங் விசாரணையும் நடைபெறுகிறது.

* உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கர்கர்தூமா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 4 சிறப்பு அமர்வுகள் உருவாக்கப்பட்டு 53 பேர் பலி, 300 பேர் காயம், கோடிக்கணக்கில் சொத்து சேதம் ஏற்பட காரணமான பிப்ரவரி மாத வடகிழக்கு டெல்லி கலவர வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

* கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டு உள்ள 755 வழக்குகளில், 395 வழக்குகளுக்கு போலீசார் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளனர். அதில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகிர் உசைன் தொடர்புடைய குற்றச்சாட்டில் குற்றப்பத்திரிகை 17,000 பக்கங்களை கொண்டதாகும்.

* டெல்லி கலவர வழக்குகளில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகிர் உசைன், காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலரும் வக்கீலுமான இஷ்ரத் ஜகான், ஜேஎன்யு மாணவர்கள் தேவங்கன கலிதா, நடாஷா நர்வால், ஷர்ஜில் இமாம், முன்னாள் மாணவர் உமர் காலித், ஜமியா பல்கலை மாணவர் ஆசிப் இக்பால் தன்கா, சமூக ஆர்வலர் காலித் சைபி ஆகியோர் மீது உஃபா சட்டம் பாய்ந்துள்ளது.

* மார்ச் மாதம் நடைபெற்ற தப்லிகி ஜமாத்தில் கொரோனா விதிமுறை மீறலில் ஈடுபட்டதாகவும், விசா முறைகேடு செய்து மாநாட்டில் கலந்து கொண்டதாகவும் 955 வெளிநாட்டினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு செப்டம்பர் முதல் இந்த மாதம் முதல் வாரம் வரை நடைபெற்ற விசாரணைகளில் குற்றமற்றவர்கள் என 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர் மற்ற அனைவரும் அபராதம் செலுத்திய பின் விடுவிக்கப்பட்டனர்.

* மீ டூ ஹேஷ் டேக் பிரபலமானதை அடுத்து , 20 ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையாளராக இருந்த போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என மத்திய அமைச்சர் எம் ஜே அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி புகார் அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார். அதனால் 2018ல் அக்பர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு, ரமணி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இரு தரப்பும் சமரசம் செய்து கொள்ள முடியாது எனக் கூறியதை அடுத்து, தீர்ப்புக்கான காத்திருப்பு நிலையில் நீதிமன்றத்தில் விசாரணை நிலைமை உள்ளது.

* உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி தேவிந்தர் சிங்கிற்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், தேசிய புலனாய்வு அமைப்பு தொடுத்த மற்றொரு வழக்கும் நிலுவையில் உள்ளதால், அவரால் வெளியில் வரமுடியவில்லை.

* நிலக்கரி ஊழல் வழக்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த திலீப் ராய், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டார். கடந்த 2000-01ம் ஆண்டு ராணுவ ஆயுத கொள்முதல் ஊழல் குற்றச்சாட்டில், சமதா கட்சி தலைவர் ஜெயா ஜெட்லி உள்ளிட்ட மேலும் இருவருக்கு தலா 4 ஆண்டு சிறை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Related Stories:

>