லண்டனில் இருந்து திரும்பி வந்த தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை: லண்டனில் இருந்து வந்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது புனே ஆய்வக முடிவில் ெதரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் சிவஞானம், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ‘டீன்’ வசந்தாமணி, சென்னை மாநகராட்சி நல அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் உடனிருந்தனர்.  இதனைத் தொடர்ந்து சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி :  வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் 36 மணி நேரத்திற்கு முன்பாக ஆர்டிபிசிஆர் சோதனை செய்து நெகடிவ் சான்றிதழடன் தமிழகம் வர வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது.

பயணிகள் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழ்நாட்டில் இந்த கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு குறைவு. இதைத்தவிர்த்து அனைவருக்கும் மீண்டும் ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது. இ - பாஸ் தகவல் வைத்து அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்படுகிறது. லண்டனில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதன்படி லண்டனில் இருந்தது வந்தவர்கள் 17 பேர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 29 பேரின் மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தற்போது வரை வரை ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள சோதனை முடிவுகள் வந்தவுடன் அறிவிக்கப்படும். இவருடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. புது வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர். சென்னையைச் சேர்ந்தவர்.

இவருக்கு கிங்ஸ் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. லண்டனில் இருந்து வந்த 2080 பேரில் 1549 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டில் அதிகம் பேர் உள்ளனர். காஞ்சிபுரம், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் குறைவான நபர்கள்தான் உள்ளன. இங்கிலாந்தில் இருந்து வந்த பலர் தானாக வந்து பரிசோதனை செய்து கொள்வது நல்ல விஷயம். இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 38 ஆயிரத்து 355 பேரை வீட்டுக்கண்காணிப்பில் வைத்துள்ளோம். அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும், புதுவகை கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>