×

பாஜ நிர்ப்பந்தத்தால் கட்சி தொடங்குவதாக அறிவித்தார் ரஜினி: அரசியல் தலைவர்கள் தகவல்

சென்னை: பாஜ தலைவர்கள் நிர்ப்பந்தம் காரணமாகவே புதிய கட்சியை தொடங்குவதாக ரஜினி அறிவித்தார் என்று அரசியல் தலைவர்கள் விமர்ச்சித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் கட்சியே ஆரம்பிக்க போவதில்லை என்று நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  இதுகுறித்து தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு: திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு: ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் திமுகவிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தோல்வி அடைய நினைப்பவர்கள், திராவிட இயக்கங்களுக்கு எதிராக செயல்படுவர்கள் ரஜினியை முன்னிறுத்தினர். தற்போது அவர் கட்சி தொடங்கவில்லை என கூறியுள்ளார்.
 அதிமுக மூத்த நிர்வாகி அன்வர் ராஜா: ரஜினி நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ விரும்பும் கட்சி  அதிமுக. இப்போது அவர் எடுத்திருக்கும் முடிவு நல்ல முடிவு. அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பது ரஜினியின் விருப்பமாக உள்ளது. வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற ரஜினி தனது ஆதரவை தருவார் என நம்புகிறேன்.

பாஜ மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்: நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்பு ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால் தங்கள் அரசியல் வாழ்க்கை பாழாகிவிடும் என்று எந்தெந்த அரசியல் கட்சியினர் நினைத்தார்களோ அவர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியை தரும். ஆனால் பாஜவுக்கு நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எங்கள் கருத்து. இது ஏமாற்றம் தருவதாக இருந்தாலும் ,அவரது உடல் ஆரோக்கியம் முக்கியம். எங்கள் கொள்கையை பரப்ப வேண்டும் என்று பாஜ ஒரு போதும் சொன்னது கிடையாது. எந்த வித அழுத்தமும் பாஜ கொடுக்கவில்லை. அவர் வரவில்லை என்பதற்காக பாஜவை விமர்சனம் செய்வது தவறு.
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்: ரஜினியை நிர்பந்தப்படுத்தி கட்சி தொடங்க வைத்து பாஜவினர் அரசியல் ஆதாயம் தேட முயன்றனர். பீகார் தேர்தலில் சித்து விளையாட்டு காட்டியதை போல இங்கு ரஜினியை பலிகடா ஆக்க முயன்றனர். பாஜவின் சித்து விளையாட்டு மிகப் பெரிய தோல்வியை அவர்களுக்கு தந்துள்ளது.

  ஜி.கே.வாசன்(தமாகா): நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இன்று தனது நிலைப்பாட்டில் இருந்து மாறி, கட்சி ஆரம்பிக்கவில்லை. காரணம், தனது உடல்நிலை குறித்து மிகுந்த அக்கறை காட்ட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். தமாகா அரசியல் ரீதியாக அதிமுக கூட்டணியில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக சிறப்புடன் பணியாற்றி கொண்டிருக்கிறது. எனவே ரஜினிகாந்த் போன்றவர்கள் மக்கள் நலம் கருதி நல்லவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். விசிக தலைவர் திருமாவளவன்: ரஜினியை சில நாட்களுக்கு முன்பு நேரில் சந்தித்து பேசினேன். நீண்ட நேரம் பேசினார். அப்போது அரசியலுக்கு வர எனது உடல் நலம் ஒத்துழைப்பு அளிக்குமா என்பது தெரியவில்லை என்று ெதரிவித்தார். நானும் அப்போது அவரது உடல் நிலை தான் முக்கியம் என்று தெரிவித்தேன். உண்மையில் அவருக்கு உடல் நலம் தொடர்பான தயக்கம் இருந்தது. அவருக்கு ஏற்பட்டு இருக்கும் உயர் ரத்த அழுத்தம் மீண்டும் ஏற்பட்டால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போது அவர் எடுத்து இருக்கும் முடிவு நல்ல முடிவு. அவர் தெளிவாக வெளிப்படையாக உண்மையை பேசி இருக்கிறார். அவரது உடல் நலம் முக்கியம். அவர் 100 ஆண்டு  வாழ வேண்டும். இது அவரது உடல் நலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாக தான் பார்க்க வேண்டும். ரஜினியின் இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைய போவது பாஜவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தான். அவர்களுக்கு தற்போது பெரிய ஏமாற்றம் கிடைத்துள்ளது. தமிழக மக்களுக்கு இதில் ஏமாற்றம் இல்லை.

Tags : party launch ,Rajini ,leaders ,BJP , Political leaders have criticized Rajini for announcing the launch of the new party due to pressure from BJP leaders.
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...