×

சிபிஐயிடம் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்: சுரானா கார்ப்பரேஷனில் சிபிசிஐடி சோதனை: முன்னாள் மேலாண் இயக்குநர் விஜய்ராஜ்ஜிடம் விசாரணை: முக்கிய ஆவணங்கள் சிக்கியது

சென்னை: சிபிஐயிடம் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில், என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குனர் விஜய்ராஜ் முன்னிலையில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா கார்ப்பரேஷன் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து தென் மண்டல சிபிஐ இணை இயக்குநராக இருந்த அசோக்குமார், டிஐஜி அருணாச்சலம், எஸ்பி ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் சுரானா கார்ப்பரேஷனில் 2012 ம் ஆண்டு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத பலகோடி மதிப்புள்ள ஆவணங்கள் மற்றும் 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து, சுரானா நிறுவனத்தின் மீதும் அந்த நிறுவனத்திற்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கரில் வைத்து சீல் வைக்கப்பட்டது. பின்னர் லாக்கர்களின் 72 சாவிகளும் 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்ததாக தயாரிக்கப்பட்ட ஆவணம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் அளித்தனர். இதற்கிடையே சுரானா நிறுவனம் தொழில் வளர்ச்சிக்காக எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ, பேங்க் ஆப் இந்தியா, ஸ்டேன்டர்டு சார்ட்டர்டு வங்கி ஆகிய வங்கிகளிடம் கடனாக வாங்கிய ₹1,160 கோடியை திரும்ப செலுத்தாமல் இருந்தது. சிறப்பு நீதிமன்றம் உத்தரவுப்படி சுரானா கார்ப்பரேஷனிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து வங்கிகளின் கடன்களை அடைக்க உத்தரவிட்டது. அதன்படி சீல் வைக்கப்பட்ட சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்த போது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தை மாயமாகி இருந்தது. இதையடுத்து, சிபிஐ வசமிருந்து மாயமான 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்க கோரி ராமசுப்பிரமணியன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.என்.பிரகாஷ் மாயமான 103 கிலோ தங்கம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து சிபிசிஐடி டிஜிபி பிரதீப் பிலிப், ஐஜி சங்கர், எஸ்பி விஜயகுமார் ஆகியோர் 103 கிலோ தங்கம் மாயமானது குறித்து விசாரணை நடத்தி இந்திய தண்டனைச் சட்டம் 380(திருட்டு) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணை தற்போது தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் முன்னாள் மேலாண் இயக்குநராக இருந்த விஜய் ராஜ் சுரானாவை நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிபிசிஐடி அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது.அந்த சம்மனை தொடர்ந்து விஜய் ராஜ் சுரானா நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்பி விஜயகுமார் முன்பு ஆஜரானார். அவரிடம் சிபிஐ சோதனை நடத்திய போது பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தங்கம் எவ்வளவு என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்ந்து சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குநர் விஜய் ராஜ் சுரானாவை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு நேரில் அழைத்து சென்று அவர் முன்னிலையில் சோதனை நடத்தினர். அப்போழுது பறிமுதல் செய்த 400.47 கிலோ தங்கம் வைக்கப்பட்டதாக கூறப்படும் சீல் வைக்கப்பட்ட லாக்கரையும் ஆய்வு செய்தனர்.
இரவு வரை நடந்த இந்த சோதனையில் மாயமான 103 கிலோ தங்கம் குறித்து முக்கிய தகவல்கள் சிபிசிஐடி போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளதால் சிபிசிஐடி போலீசார் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். மேலும், விஜயராஜ் சுரானாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : CBI , 103 kg of gold in CBI possession: CBCID probe at Surana Corporation: Investigation with former managing director Vijayraj: Important documents seized
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...