×

UPA தலைவரை மாற்றும் விவகாரம்; காங்கிரஸ் நண்பர்கள் ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? சிவசேனாவின் கருத்தால் தேசிய அரசியலில் பரபரப்பு

புதுடெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரை மாற்ற வேண்டும் என்று சிவசேனா கூறிவரும் நிலையில், அதற்காக காங்கிரஸ் நண்பர்கள் ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? என்று அக்கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. ஐக்கிய  முற்போக்குக் கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்குள் விரைவில் நடைபெற இருக்கும் உட்கட்சித் தேர்தலுக்குப்பின், கட்சித் தலைவர் பதவி மாறினால், ஐக்கிய முற்போக்குக்  கூட்டணித் தலைவர் பதவியும் மாறக்கூடும். அந்தப் பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பொருத்தமாக இருப்பார் எனத் தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் சரத்பவார் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், சரத்பவாரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராக்கலாம் என்று சிவசேனா கட்சியும் முன்மொழிந்தது. ஆனால், தேசியவாத  காங்கிரஸ் தரப்பில் அவ்வாறு எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் சிவசேனா கட்சியின் தலைவர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு  வருகின்றன. இவ்விவகாரம் மகாராஷ்டிரா கூட்டணி ஆட்சியில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சிவசேனா தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி வலுவாக மாற வேண்டும் என்றால், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. ஐக்கிய முற்போக்கு  கூட்டணியை யார் வழிநடத்த வேண்டும் என்பது விவாதமப் பொருள் அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்தினால்தான் அது பாஜகவுக்கு பெரும் சவாலாக அமையும். காங்கிரஸ் கட்சியால் இதையெல்லாம் செய்ய  முடியுமானால், அதனை நாங்கள் வரவேற்கிறோம். இப்போது காங்கிரஸ் கட்சி மாநிலங்களில் தனது செல்வாக்கை இழந்துள்ளது.

பிராந்திய கட்சிகள் பல மாநிலங்களில் காங்கிரசை வீழ்த்தி உள்ளன. ஐதராபாத் மாநகராட்சி தேர்தலின் முடிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக அமைந்துள்ளன. ஒருகாலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் பலமான கட்சியாக இருந்தது. இன்று  நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கிறிஸ்தவ மற்றும் பழங்குடி வாக்காளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தபோதிலும், அங்கு பாஜக வளர்ச்சி அடைந்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல்  முடிவில், பாஜக அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் ஒரு பெரிய கட்சி என்றாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வழிநடத்த முடியவில்லை.

நாடாளுமன்றத்தில் காங்கிரசுக்கு அடுத்த இடத்தில் திமுக, திரிணாமுல் போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் அதிகம் உள்ளனர். இருந்தும் நாட்டின் எதிர்க்கட்சியில் ஒரு வெற்றிடமும், அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாத நிலைமையும் உள்ளது.  அதனால், எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரே கொடியின் கீழ் ஒன்று சேர்க்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். அதற்காக, காங்கிரசில் உள்ள நண்பர்கள் ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்கள் அதிருப்தியில்  உள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே, மாற்று தலைமை தேவை. யார் அதை கொடுக்க முடியும் என்பதுதான் கேள்வி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  



Tags : friends ,UPA ,Congress ,Why ,Shiv Sena , The issue of changing the UPA leader; Why should Congress friends be shocked? Shiv Sena's opinion stirs up national politics
× RELATED கன்னியாகுமரி அருகே ஆபாசமாக திட்டியதால் கீழே தள்ளி கொன்றோம்