×

புத்தாண்டிலாவது பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுமா?.. பயணிகள் பரிதவிப்பு

நெல்லை: தென்மாவட்டங்களில் பாசஞ்சர் ரயில்களை புத்தாண்டிலாவது இயக்கிட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். தென்காசி, திருச்செந்தூர் பகுதிகளில் இருந்து தினசரி நெல்ைல வரும் பயணிகள் கடும் திண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா பரவலை முன்னிட்டு மார்ச் 22ம் தேதி அனைத்து ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வில் சமீபகாலமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை, கோவை, திருச்சி, திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பாசஞ்சர் ரயில்கள் இயக்கம் குறித்து ரயில்வே சார்பில் எவ்வித அறிவிப்பும் இல்லை.

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பயம் நீங்கி தற்போது சகஜநிலை வந்துவிட்டது. அனைத்து அலுவலகங்களும், பஸ் போக்குவரத்து உள்ளிட்டவை முன்பு போல முழுவீச்சில் இயங்கி வருகின்றன. குடிமகன்கள் அதிகம் கூடும் டாஸ்மாக் பார்கள் கூட இன்று திறந்துவிட்டன. ஆனால் பாசஞ்சர் ரயில்கள் இயக்கத்தை மட்டும் தெற்கு ரயில்வே கொரோனாவை காரணம் காட்டி தொடர்ந்து தள்ளிப்போட்டு வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். விரைவில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகள் வருகின்றன. பொங்கல் பண்டிகையை ஒட்டி கிராமங்களில் இருந்து பலரும் ஜவுளி, பலசரக்கு பொருட்களை வாங்கிட நகரங்களுக்கு வந்து செல்வர்.

பொருட்களை கொண்டு செல்ல பெரும்பாலும் பொதுமக்களுக்கு பாசஞ்சர் ரயில்கள் வசதியாக இருக்கும். நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட மாநகரங்களில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு பாசஞ்சர் ரயி்லகளே வசதியாக இருந்தன. காலையில் வீட்டை விட்டு புறப்படும் அலுவலக ஊழியர்கள் காலை உணவை கூட ரயிலில் அருந்திவிட்டு, வேகமாக அலுவலகங்கள் வந்து சேருவர். ஆனால் தற்போது பஸ்சில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ரயில்களில் சீசன்பாஸ் சலுகைகள் ஒருபுறமிருக்க, நிம்மதியாக அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கவும் வழிவகைகள் உள்ளன.

ஆனால் பாசஞ்சர் ரயில்கள் இயக்கம் குறித்து தெற்கு ரயில்வே மூச்சுவிட மறுக்கிறது. நெல்லைக்கு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களும் கூட்டத்தை அள்ளிக்கொண்டு வருகின்றன. எனவே பயணிகளின் இடநெருக்கடியை கருத்தில் கொண்டு பாசஞ்சர் ரயில்களை இயக்கிட வேண்டும். நெல்லையை பொறுத்தவரை நெல்லை- திருச்செந்தூர், நெல்லை- செங்கோட்டை, நெல்லை- நாகர்கோவில் மார்க்கங்களில் பாசஞ்சர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் பாதிப்பில் உள்ளனர். இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் காலை, மாலை வேளைகளில் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கடந்த 9 மாதமாக ரயில்கள் முடக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்தில் உள்ளனர். எனவே பயணிகள் ரயில்களை புத்தாண்டிலாவது இயக்கிட வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.

லாபநோக்கமே காரணம்
இதுகுறித்து நெல்லை, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியராஜ் கூறுகையில், ‘பயணிகள் ரயில்கள் இயக்கம் குறித்து ரயில்வே எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை, தமிழகத்தை பொறுத்தவரை பயணிகள் போக்குவரத்திற்கு அதிகம் பயன்படுத்துவது ரயில்களைத்தான். அதிலும் பாசஞ்சர் ரயில்களில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும். புத்தாண்டு, பொங்கல் என பண்டிகைகள் வரும் நிலையில், பயணிகள் ரயிலை விரைந்து இயக்கிட வேண்டும். லாப நோக்கத்தை கணக்கில் கொள்ளாமல், பயணிகள் நலன்களை கருத்தில் கொண்டு சமூக இடைவெளியோடு பாசஞ்சர் ரயில்களை இயக்குவதே நல்லது’’ என்றார்.

Tags : New Year's Eve , Will passenger trains run on New Year's Eve?
× RELATED மராட்டியம்: மராத்தியர்களின் புத்தாண்டான குடி பத்வா கோலாகல கொண்டாட்டம்