×

‘மொய்பணம், பரிசு பொருள் வேண்டாம்’ மணமக்களின் கோரிக்கை ஏற்று ரத்த தானம் வழங்கிய மக்கள்: இணையதளங்களில் வாழ்த்து குவிகிறது

திருமலை: ‘திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்’ என்றும் ‘சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது’ என்றும் கூறுவார்கள். ஒவ்வொருவருக்கும் திருமணம் குறித்த கனவுகள் ஏராளமாக இருக்கும். வெளிநாடுகளில் வித்தியாசங்களை விரும்பி ஆகாயத்தில் பறந்தபடியும், கடலுக்கு அடியிலும் திருமணம் செய்துகொள்பவர்கள் உண்டு. மிகப்பெரிய அளவில் வசதி படைத்தவர்கள் மொய்ப்பணம், பரிசுப்பொருட்கள் வேண்டாம் என திருமண பத்திரிகையில் அச்சிட்டு வழங்குவதையும் பார்த்திருக்கிறோம். சிலர் தங்கள் திருமணத்திற்கு வருபவர்களுக்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்குவர்.

ஆனால் ஆந்திராவில் வாலிபர் ஒருவர், தனது திருமணத்திற்கு வருபவர்களை ரத்த தானம் செய்யும்படி வலியுறுத்தி, அதன்படி ரத்ததானம் பெற்றுள்ளார். அவருக்கு இணையதளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது. அதுபற்றிய விவரம் :
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பிட்டாபுரத்தை சேர்ந்தவர் தயாசாகர். தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர். இவருக்கும் உறவினரான கிருஷ்ணவேணி என்பவருக்கும் நேற்று பிட்டாபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. முன்னதாக தயாசாகர் கொடுத்திருந்த திருமண அழைப்பில், ‘எங்களை மனதார வாழ்த்த வரும் நட்புகளுக்கும், உறவுகளுக்கும் தாழ்மையான ஒரு வேண்டுகோள்.

தயவு செய்து பரிசு பொருட்கள், மொய்ப்பணம் ஆகியவற்றை தவிர்த்து முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள்’ இவ்வாறு தெரிவித்திருந்தார். இதற்கு மணப்பெண்ணும் ஆதரவு தெரிவித்திருந்தாராம். அதன்படி நேற்று நடந்த திருமணத்தில் ஏராளமான நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். பின்னர் ரத்த தானம் பெறுவதற்கென மண்டபத்தில் தனியாக ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு டாக்டர், நர்ஸ் உள்ளிட்டோர் இருந்தனர். இந்த அறையை மணமக்கள் ஜோடி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதையடுத்து திருமணத்திற்கு வந்திருந்த நண்பர்கள், உறவினர்கள் என மொத்தம் 33 பேர் அன்பளிப்புகளை தவிர்த்து ரத்த தானம் வழங்கினர். இவரது இந்த செயல்பாடு இணையதளங்களில் வைரலாகி ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நெஞ்சார்ந்த நன்றி
இதுகுறித்து திருமண மண்டபத்தில் மணமகன் தயாசாகர் பேசுகையில், ‘தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் நான், ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதில் தீவிரமாக உள்ளேன். பலர் ரத்தம் கிடைக்காமல் மருத்துவமனைகளில் பாதித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ எனது திருமணம் நல்வாய்ப்பாக இருக்கும் எனக்கருதினேன். எனது திருமண அழைப்பிதழில் அன்பளிப்பை தவிர்த்து ரத்த தானம் செய்யும்படி வலியுறுத்தினேன். அதன்படி ரத்த தானம் வழங்கினர். எனது வேண்டுகோளை ஏற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி’ என்றார்.



Tags : bride , People who donated blood at the request of the bride and groom: ‘No cash, no gift items’: Congratulations on websites
× RELATED மணப்பெண் மாயம்