×

அதிமுக தன்னிச்சையாக பிரசாரத்தை தொடங்கியது; கூட்டணி கட்சிகள் கடும் அதிருப்தி: பாஜக, பாமக முரண்டு; தேமுதிக 3-வது அணிக்கு முயற்சி

சென்னை: கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள், துணை முதல்வர் பதவி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசாமல், தன்னிச்சையாக அதிமுக தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கியதால், கூட்டணி கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.  இதனால் தேமுதிக 3வது அணி அமைப்பது குறித்து தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக முழுவீச்சில் தயாராகி  வருகிறது. ‘‘தமிழகம் மீட்போம்!” எனும் தலைப்பிலான ‘‘2021- சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்களில்” மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

இப்போது மக்கள் கிராம சபை என்ற பெயரில் மக்களை சந்தித்து பேசி வருகிறார். ஜனவரி முதல் வாரத்தில் நேரடியாக சென்று அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதாலும், தேர்தல்  நேரத்தில் தொகுதி பங்கீட்டை வைக்கலாம் என்று முடிவெடுத்ததாலும், அனைத்து தலைவர்களும் பிரசாரத்தில் குதித்துள்ளனர். அதிமுகவை ெபாறுத்தவரை தொடர்ந்து ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. கூட்டணியில் அங்கம்  வகிக்கும் பாஜக முதலில் 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இது தொடர்பாக சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, இபிஎஸ், ஓபிஎஸ்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள், ‘முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்கவில்லை. மேலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும். பாஜகவும் அமைச்சரவையில் இடம்  பெறும்’ என்று பேசி வந்தனர். இது அதிமுகவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைவர்கள், ‘அதிமுக தலைமையில்  தான் கூட்டணி. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை’ என்று அதிரடியாக அறிவித்தனர்.

இதனால், கூட்டணியில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேற்று திடீரென பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்து பேசினார். அவர் வெளியூர் பயணத்தை ரத்து செய்து விட்டு வந்து  சந்தித்ததாக கூறப்படுகிறது. அப்போது மோதல் போக்கு தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.ஆனால், புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் பெறப்பட்ட கையெழுத்தை முதல்வரிடம் அளித்ததாக எல்.முருகன்  கூறி விட்டு சென்றார். தொடர்ந்து அவர் கட்சி அலுவலகத்தில் அளித்த பேட்டியில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிப்போம் என்று கூறினார்.

தமிழக பாஜக தலைவர்கள் இவ்வாறு கூறி வருகின்றனர். டெல்லி தலைமை என்ன முடிவு எடுக்க போகிறது தெரியாமல் தமிழக பாஜக இருந்து வருகிறது. அதே நேரத்தில் பாமகவும், ‘துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும். அதிக  தொகுதிகளை ஒதுக்க வேண்டும்’ என்றும் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது. அவ்வாறு வழங்காவிட்டால் எங்களது முடிவு வேற மாதிரி இருக்கும் என்று எச்சரித்துள்ளது. பாமகவை பொறுத்தவரை துணை முதல்வர் பதவி, பாஜகவுக்கு  இணையான சீட் வேண்டும் என்று கூறி வருகிறார். அவரை சந்திக்கச் சென்ற அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன் ஆகியோரையும் அவர் கூட்டணி குறித்து எதுவும் பேசாமல் அனுப்பிவிட்டார்.

 பாமக கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. மேலும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவும், ‘துணை முதல்வர் மற்றும் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம்’ என்று  எச்சரித்துள்ளனர். அவர்களும் இது தொடர்பாக உரிய முடிவை விரைவில் எடுக்காவிட்டால், ஜனவரியில் நடைபெறும் செயற்குழு, பொதுக்குழுவில் முக்கிய முடிவை எடுத்து அறிவிப்போம் என்று அதிரடியாக அறிவித்துள்ளனர். மேலும் ரஜினி,  கமலுடன் இணைந்து மூன்றாவது அணி அமைக்கலாமா? என்றும் தேமுதிக ஆலோசித்து வருகிறது. தொண்டர்களும் கட்சியை வலியுறுத்தத் தொடங்கிவிட்டனர்.

பாஜக, பாமக, தேமுதிகவினர் தங்களது கோரிக்கையில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகின்றனர். இதனால், தான் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்காமல்  புறக்கணித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள், ஆட்சியில் பங்கு அளித்தால் கூட்டணிக்கு தலைமை ஏற்கும் கட்சிக்கு மதிப்பு இல்லாமல் போய் விடும். தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி என்பது  கிடையாது. நாம் புதுக்கலாசாரத்தை ஏற்படுத்தி கொடுத்தால் அது நமக்கு தான் அழிவாகி விடும் என்று கருதுகிறது. கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகளை வழங்கினால் அதிமுக மிக குறைவான இடங்களில் தான் போட்டியிட வேண்டிய  நிர்ப்பந்தத்துக்கு ஆளாக நேரிடும்.

இதனால், தான் அதிமுக கூட்டணி கட்சிகளின் கோரிக்கையை ஏற்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில் அதிக சீட் கேட்கும் கட்சிகளை கழட்டி விடவும் அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் கூட்டணியும் உருவாகவில்லை. கூட்டணி கட்சிகளையும் கலந்தாலோசிக்காமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை  முதல்வர் மற்றும் மூத்த தலைவர்கள் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இது கூட்டணி கட்சிகளுக்குள் கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது. கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அதிமுக  எப்படி இப்படி பிரசாரத்தை தொடங்கலாம் என்று அவர் கொதித்து போய் உள்ளனர்.

இதனால், கூட்டணி கட்சிகள் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கையில் ஈடுபடலாம் என்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. அதே நேரத்தில் எடப்பாடியின்  பிரசாரம் அதிமுக கூட்டணி கட்சிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.

Tags : BJP ,AIADMK ,clash ,team ,Temujin , AIADMK started campaigning arbitrarily; Coalition parties strongly dissatisfied: BJP, BJP clash; Temujin tried for the 3rd team
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...